முள்ளம்பன்றி வேட்டை; வலை வைத்தவர் கைது
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, முள்ளம்பன்றியை வேட்டையாடிய நபரை வனத்துறையினர் கைது செய்தனர். பொள்ளாச்சி வனச்சரகம் சேத்துமடை கிழக்குபிரிவு மாங்கரை சுற்றுப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில், வனச்சரகர் ஞானபாலமுருகன் தலைமையில், வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, சோமந்துறைசித்துார் தனியார் பட்டா நிலத்தில் கருப்புசாமி என்பவர், வலை வைத்து முள்ளம்பன்றியை வேட்டையாடியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் மீது வன உயிரின குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கிராமங்களில், முயல், முள்ளம்பன்றி வேட்டையில் யாரும் ஈடுபடக்கூடாது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.