மூலையில் முடக்கும் மூட்டுவலி மீண்டு வர இதோ வழி!
நடக்கவே முடியாத அளவு, ஏற்படும் மூட்டுவலி தான் முதியவர்களுக்கு ஏற்படும் கொடுமையான விஷயம். முதுமையில் மூட்டு வலி ஏற்படாமல் இருக்க, பழைய பழக்கங்களான சம்மணம் போட்டு அமர்தல் ஆகிய பழக்கங்களை பின்பற்ற அறிவுறுத்துகிறார், கோவை அரசு மருத்துவமனை எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை மைய இயக்குனர் டாக்டர் வெற்றிவேல்செழியன்.அவர் கூறியதாவது:முதியவர்கள் அனைவருக்கும் கால்சியம் பற்றாக்குறை ஏற்படுகிறது. அது குறையும் போது எலும்பு பலவீனம் அடைகிறது. இது பெண்களுக்கு மாதவிடாய் முடிந்த பின், எலும்பின் அடர்த்தி குறைவதால் இது ஏற்படுகிறது.ஆண்களுக்கும் இது ஏற்படுகிறது. அந்த அடர்த்தியை அதிகரிக்க செய்வது அவசியம். இதைக்குறைக்க உடற்பயிற்சி அவசியம்.வலி உள்ளது என, வீட்டில் முடங்கி விடக்கூடாது. சிறிது துாரம் நடக்க வேண்டும். வீட்டில், சிறிய வயதில் இருந்து சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து, உணவு உட்கொள்ளக்கூடாது. தரையில் சம்மணம் போட்டு அமர வேண்டும்.இந்திய மாடல் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். வலி துவக்கத்தில் இருக்கும் போதே கவனிக்க வேண்டும். கால்சியம் அதிகம் உள்ள பால், தயிர், மோர் சேர்த்துக்கொள்ள வேண்டும். பெண்கள் பால் அல்லது மோர் அருந்த வேண்டும். காய்கறி, கீரைகள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.யோகா, உடற்பயிற்சி செய்ய வேண்டும். மூட்டுகளை பலமானதாக, வளமானதாக வைத்திருக்க பயிற்சி அவசியம். அந்தந்த பருவகாலத்தில் கிடைக்கும் பழங்களை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.