யானைகளால் ஏற்படும் வாழை சேதத்திற்கு அதிக இழப்பீடு; விவசாயிகள் கோரிக்கை
மேட்டுப்பாளையம்: காட்டு யானைகளால் சேதமடையும் வாழைகளுக்கு, இழப்பீட்டுத் தொகை அதிகப்படுத்த வேண்டும். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். சிறுமுகை வனச்சரக அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் சிறுமுகை வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் தலைமை வகித்து பேசியதாவது: வனப்பகுதி அருகே குடியிருக்கும் பொதுமக்கள், மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக லிங்காபுரம், காந்தவயல் ஆகிய பகுதிகளுக்கு இரவில் செல்லும் பொதுமக்கள், சாலையின் ஓரங்களில் யானைகள் உள்ளதா என கவனித்து பின், செல்ல வேண்டும். இரவில் யானைகள் விவசாய நிலங்களுக்கு வருவது தெரிந்தால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வனவிலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு, இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. பயிர் சேதம் இதுவரை வராமல் இருந்தால், அதற்கான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வனச்சரக அலுவலர் பேசினார். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது: தற்போது காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. கூட்டம் கூட்டமாக தோட்டத்தில் புகுந்து, வாழைகளை சேதம் செய்து வருகின்றன. எனவே காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் யானைகளால் ஏற்படும் வாழை சேதத்திற்கு, வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை, அதிகப்படுத்த வேண்டும். வனத்துறை சார்பில் சோலார் மின்வேலி அமைக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர். கூட்டத்தில் வனவர் சுரேந்திரநாத் வரவேற்றார். வனவர் கோபி நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வனப் பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் செய்து இருந்தனர்.