உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானைகளை ஈர்க்காத பயிர்களை பயிரிட வேண்டும்; மலையோர விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

யானைகளை ஈர்க்காத பயிர்களை பயிரிட வேண்டும்; மலையோர விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

கோவை; உலக வன தினத்தை முன்னிட்டு, கோவையில் செயல்பட்டு வரும், ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் முரண்பாடு மேலாண்மை மையம் (ஏ.இ.சி.ஆர்.சி.எம்.சி.,) சார்பில், யானை - மனித முரண்பாடுகள் குறித்த செய்தியாளர் சந்திப்பு, நேற்று நடந்தது.இதில், உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார், ஏ.இ.சி.ஆர்.சி.எம்.சி., விஞ்ஞானி நவீன் ஆகியோர் கூறியதாவது:தமிழகத்தில் 2024 கணக்கெடுப்பின்படி, 3,063 யானைகள் உள்ளன. கோவை வனக்கோட்டத்தில், 336 யானைகள் உள்ளன. வனவிலங்குகள் ஒரே இடத்தில் வசிப்பவை அல்ல; வலசை செல்பவை. யானைகள் மிகப் பெரிய வாழிடப்பரப்பைக் கொண்டவை.கோவை வனக்கோட்டத்தில், அதிக யானை மனித முரண்பாடுகள் நடக்க, அதன் புவியமைப்பும் காரணம். 360 கி.மீ., வனப்பகுதி, மனிதக் குடியிருப்போடு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.பெரும்பாலும் அதிக சாய்தளம் கொண்ட மலைப்பகுதி. சமதளப்பரப்பு குறைவு. எனவே, மலையடிவாரத்தில் கடக்கும்போது, குடியிருப்பு, விவசாய நிலங்களுக்குள் அவை புக நேரிடுகிறது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், மலையோரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட பயிர் வகைகள் தற்போது மாறியுள்ளன. யானைகளை ஈர்க்காத அளவுக்கு, சாகுபடி செய்ய அறிவுறுத்துகிறோம்.போளுவாம்பட்டி, தடாகம், பெ.நா.பாளையம், கல்லாறு (மேட்டுப்பாளையம்), சிறுமுகை இந்த 5 பகுதிகள்தான், அதிக யானை - மனித முரண்பாடுகள் காணப்படும் இடமாக இருக்கின்றன.ஏ.இ.சி.ஆர்.சி.எம்.சி., சார்பில், யானைகள் தொடர்பான தரவுகளைத் தொடர்ந்து சேகரித்து வருகிறோம். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், யானை மனித முரண்பாடுகள் பெருமளவு குறைந்து வருகின்றன.2011 முதல் 2024 வரை, யானை மனித முரண்பாடுகளால், கோவை கோட்டத்தில் 185 மனிதர்களும், 210 யானைகளும் உயிரிழந்துள்ளனர். மதுக்கரை பகுதியில் 12 ஏ.ஐ., கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு, ரயில் யானைகள் மோதவிருந்த 1,124 விபத்துச் சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆரோக்கியமான வளர்ச்சி. யானைகள் வனத்தை விட்டு வெளியேறும் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு, இதுவும் ஓர் காரணம்.யானை மட்டுமல்லாது, எந்தவொரு வனவிலங்கையும் இடமாற்றம் செய்வது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. வேறு இடங்களில் அவை வாழும் வாய்ப்பு குறைவு.ஏற்கனவே, அந்த வாழிடப்பரப்பை ஆக்கிரமித்து வைத்திருக்கும் விலங்குடன் இது போட்டியிட வேண்டியிருக்கும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.பயிற்சி உதவி வனப்பாதுகாவலர் சாருமதி வனச்சரகர் கோகுல், விஞ்ஞானி பீட்டர் பிரேம் சக்ரவர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.2011 முதல் 2024 வரை, யானை மனித முரண்பாடுகளால், கோவை கோட்டத்தில் 185 மனிதர்களும், 210 யானைகளும் உயிரிழந்துள்ளனர். மதுக்கரை பகுதியில் 12 ஏ.ஐ., கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு, யானைகள் மீது ரயில் மோதவிருந்த 1,124 விபத்துச் சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

'யானைகள் முதலில்

எச்சரிக்கை விடுக்கும்'''யானைகள் மனிதனைத் தாக்கும் நோக்கத்தில், வனத்தை விட்டு வெளியேறுவதில்லை. 30 மீட்டர் நெருக்கத்துக்குள் மனிதர்கள் வந்தால், அவை எச்சரிக்கும்.பிறகே தற்காப்பு நோக்கில் தாக்க முன்னேறும். யானைகளைப் புரிந்து கொண்டால், மனித வனவிலங்கு முரண்பாடுகளைத் தவிர்த்து விட முடியும்.வனப்பகுதிக்குள் போதிய உணவு இருந்தாலும், தினமும் 30 கி.மீ., சுற்றி, 200 கிலோ உணவு உண்பதற்குப் பதிலாக, விவசாய நிலத்தில் ஒரே இடத்தில் உணவு கிடைத்தால், அதன் நடத்தைகள் மாறவே செய்யும்,'' என்றுஉதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி