பாலின சமத்துவ பேரணி இந்து முன்னணி புகார்
கோவை : கோவையில் பாலின சமத்துவ பேரணி நடத்திய, மா.கம்யூ., கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, இந்து முன்னணி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் பாலின சமத்துவ பேரணி நடத்தப்பட்டது. இரு நாட்களுக்கு முன் இரவு, 10:30 மணியளவில் 100 அடி சாலையில் உள்ள மா.கம்யூ., அலுவலகத்தில் இருந்து காந்திபுரம் வரை, ஆண்கள் மற்றும் பெண்கள் பாலின சமத்துவம் குறித்த பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்றனர். இரவு நேரத்தில், மேளதாளங்களுடன் பேரணியாக சத்தம் போட்டு, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால், பேரணி ஒருங்கிணைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்து முன்னணி சார்பில், காட்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்து முன்னணி மாவட்ட தலைவர் தசரதன், போலீசில் அளித்த புகார் மனுவில், 'இரவு நேரத்தில் நடந்த இந்த பேரணியில், சமூக விரோதிகளும் கலந்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இந்து அமைப்புகள் பகலில் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டாலே, அனுமதி மறுக்கும் போலீசார் இரவு நேரத்தில் பேரணி நடத்த எப்படி அனுமதி அளித்தனர். இரவு நேரத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாக, பேரணி நடத்திய கம்யூனிஸ்ட் அமைப்பினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என கூறியுள்ளார்.