மனைவி கொலையில் கணவர் கைது மனம் மாறிய டிரைவரால் சிக்கினார்
பெ.நா.பாளையம்: கோவை அருகே தன் மனைவியை, டிரைவரை வைத்து கத்தியால் குத்தி கொலை செய்த பன்னிமடை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட தாளியூரில் வசித்தவர் மகேஸ்வரி, 46. இவரது கணவர் அ.தி.மு.க.,வை சேர்ந்த கவி சரவணன், 51. இவர் பன்னிமடை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். அ.தி.மு.க., மாவட்ட கவுன்சிலராகவும் பணியாற்றியவர். தற்போது அம்மா பேரவை நிர்வாகியாக உள்ளார். கணவன், மனைவி கருத்து வேறுபாடால் கவி சரவணன் அவரது குடும்பத்தை பிரிந்து வடவள்ளியில் தனியாக வசிக்கிறார். அக்., 28ல் மகேஸ்வரி தாளியூர் வீட்டில் தனியாக இருந்தபோது, கவி சரவணனிடம், 15 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வந்த சுரேஷ், 49, அங்கு வந்தார். கவி சரவணனுக்கு, பிற பெண்களுடன் இருக்கும் தொடர்பு குறித்து மகேஸ்வரி, சுரேஷ் ஆகியோரிடையே அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், சுரேஷ், கத்தியால் மகேஸ்வரியை குத்தி கொலை செய்து, வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். விசாரணையில், சுரேஷ் அளித்த வாக்குமூலத்தில், 'அக்., 19ம் தேதி மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த விருந்தில் கவி சரவணன் என்னிடம், 'மகேஸ்வரியால் தொந்தரவு அதிகமாக உள்ளது. விவாகரத்து தர மறுக்கிறாள். அவளை முடித்துவிடு. 'வழக்கு, ஜாமின் உள்ளிட்டவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். திண்டுக்கல், வேடசந்துார், செங்கல் சூளையை நீ பார்த்துக்கொள். உனக்கு வேண்டிய வசதிகளை நான் செய்து தருகிறேன் என, மகேஸ்வரியை கொலை செய்ய துாண்டினார்' என, கூறியுள்ளார். இதையடுத்து, நேற்று மாலை கவி சரவணன் கைது செய்யப்பட்டார்.