ரோலெக்ஸ் யானையை பிடிக்க வந்தாச்சு சின்னதம்பி
தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூர் சுற்றுப்பகுதியில் சுற்றி வரும் ரோலெக்ஸ் யானையை பிடிக்கும் பணி, மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகத்திற் குட்பட்ட பகுதிகளில் உள்ள மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள விளைநிலங்கள், வீடு களை தொடர்ந்து, ரோலெக்ஸ் என்ற காட்டு யானை சேதப்படுத்தி வருகிறது. ரோலெக்ஸ் யானையை பிடிக்கும் முயற்சியில், வனக்கால்நடை டாக்டர் விஜயராகவன் படுகாயமடைந்தார். அதன்பின், யானையை பிடிக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.இந்நிலையில், ரோலெக்ஸ் யானையை பிடிக்கும் பணிக்காக கொண்டுவரப்பட்டிருந்த நரசிம்மன் மற்றும் முத்து ஆகிய இரு கும்கி யானைகளுக்கு மதம் பிடிக்க துவங்கியதால், பாதுகாப்பு காரணங்களுக்காக, அவ்விரு கும்கிகளையும், டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்த சின்னதம்பி என்ற கும்கி யானை, நேற்று கொண்டு வரப்பட்டது. வனத்துறையினர் கூறுகை யில், 'ரோலெக்ஸ் யானையை பிடிக்க, முதுமலையில் இருந்து, 2 டாக்டர்கள் வந்துள்ளனர். சின்னதம்பி என்ற கும்கி வரவழைக்கப்பட்டுள்ளது. முதுமலையில் இருந்து, மேலும் 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட உள்ளன. இரவு முதல் ரோலெக்ஸ் யானையை பிடிக்கும் பணி துவங்கப்படவுள்ளது' என்றனர்.