பொள்ளாச்சி:'மனுக்கள் மீதான அரசு அதிகாரிகளின் பதில், திருப்தி அளிக்காவிட்டால், மனுக்கள் மீது மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்படும்,' என, சப்-கலெக்டர் தெரிவித்தார்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார்.விவசாயிகள் பேசியதாவது:திருமூர்த்தி அணையில் இருந்து, முதலாம் மண்டல பாசனத்துக்கு, வரும், 12ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதற்காக, பி.ஏ.பி., பிரதான கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.அணையில் இருந்து, பாசனத்திற்கான தண்ணீர் திறக்கப்பட்டால், வறட்சியின் காரணமாக, ஆங்காங்கே தண்ணீர் திருட வாய்ப்புள்ளது. எனவே, முன்கூட்டியே கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தி, தண்ணீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி, மூன்று ஆண்டுகளாக முடிக்கப்படாமல் இழுபறியாக உள்ளது. அப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். இதேபோல, சி.கோபாலபுரம் -- தேவம்பாடி பகுதியில் கிராமச் சாலை அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டும், பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.கிராமங்களில், கால்நடைகளுக்கு சினை ஊசி செலுத்தும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதால், கால்நடை வளர்ப்போர் சிரமப்படுகின்றனர். அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை நியமிக்க வேண்டும். கிராமங்கள் தோறும், கால்நடை ஆம்புலன்ஸ் இயக்கத்தை முறைபடுத்த வேண்டும். கோபாலபுரத்தில் பள்ளிகளின் அருகே செயல்படும் 'டாஸ்மாக்' மதுக்கடையை அகற்ற வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.ஏற்கனவே, விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள், ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவைகளில் பிரச்னைக்குரிய மனுக்களை நேரடியாக பெற்றுக் கொண்ட சப்-கலெக்டர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக ஆய்வு செய்யப்படும் எனவும் மனுதாரர்களிடம் தெரிவித்தார்.அதன்பின் சப்-கலெக்டர் பேசியதாவது:பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள், 'ஆன்லைன்' வாயிலாக பதிவேற்றம் செய்து, பரிசீலனைக்குப் பின், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.ஒவ்வொரு மனுவும் சமர்ப்பிக்கப்படும் போதும், தீர்வின் போதும் மனுதாரர் ஒரு குறுந்தகவலை பெறுவார். அதிகாரிகளின் பதில் திருப்தி அளிக்கவில்லையென்றால் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களை மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்படும்.ஒவ்வொரு கூட்டத்திலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து கேட்டறியப்படும். இனி, மக்களின் எந்தவொரு மனுவும் தவறாது.இவ்வாறு, அவர் பேசினார்.
சந்தேகங்களுக்கு விளக்கம்!
வழக்கமாக, குறைகேட்பு கூட்டம் துவங்கியவுடன் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து பேசுவார்கள். அப்போது, துறை ரீதியான அதிகாரிகள் அதற்கு விளக்கமளிப்பர்.நேற்று நடந்த கூட்டத்தில், முதலில் அதிகாரிகள் ஒவ்வொருவரும் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சேவைகள் குறித்து விளக்கிப் பேசினர். அதனிடையே விவசாயிகள் தங்களிடையே நிலவிய சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு, அறிந்து கொண்டனர்.