பிளாஸ்டிக் தரம் பிரித்து கொடுத்தால் பணம்!
அனனுார்: 'பிளாஸ்டிக்கை தரம் பிரித்து, சுத்தப்படுத்தி கொடுத்தால் பணம் வழங்கப்படும்,' என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.மத்திய, மாநில அரசுகள் சார்பில், 'துாய்மையே சேவை' என்னும் இயக்கம் கடந்த 17ம் தேதி துவக்கப்பட்டது. வருகிற அக்., 2ம் தேதி வரை அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறுகிறது. இந்த இயக்கத்தில் ஊராட்சிகளில் மரக்கன்று நடுதல், மாஸ் கிளீனிங் செய்தல், பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த தீமைகளை விளக்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது.காட்டம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் காயத்ரி, துணைத் தலைவர் லட்சுமி காந்த், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ் மற்றும் பொது மக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு இயக்கம் நடந்தது.இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன் பேசுகையில், ''பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு வரும் துாய்மை பணியாளரிடம், மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து தர வேண்டும். மக்காத குப்பையை தரம் பிரித்து துாய்மைப்படுத்தி கொடுத்தால், எடைக்கு ஏற்ப ஊராட்சி சார்பில் தொகை வழங்கப்படும்,'' என்றார்.ஒருமுறை மட்டும் பயன்படும் பிளாஸ்டிக் கவர், டம்ளர், தட்டு ஆகியவற்றிற்கு பதில் வாழை இலை, பாக்கு மட்டை, காகித சுருள், கண்ணாடி அல்லது உலோகத்தில் ஆன பொருட்களை பயன்படுத்த வேண்டும்.மஞ்சப்பை, காகிதப்பை, சணல் பை, பீங்கான் பாத்திரங்கள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.வீடு, வீடாக, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அன்னுார் ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சிகளிலும் விழிப்புணர்வு இயக்கம் நடந்தது. 'மாஸ் கிளீனிங்' பணி நடந்தது.'விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்று நடுதல் அக்., 2ம் தேதி வரை நடைபெறும்,' என ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.