உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விதிமீறி கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை: 47 மருந்தகங்கள் மீது நடவடிக்கை

விதிமீறி கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை: 47 மருந்தகங்கள் மீது நடவடிக்கை

பொள்ளாச்சி: தமிழகத்தில் விதிமீறி கருக்கலைப்பு மாத்திரை விற்றதன் பேரில், கடந்த 11 மாதங்களில், சஸ்பெண்ட், உரிமம் ரத்து, வழக்கு என, மொத்தம் 47 மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், கருக்கலைப்புகளில் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குடும்ப நலம் மற்றும் மருந்துக்கட்டுப்பாட்டுத்துறை வாயிலாக மருந்தாளுனர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அவ்வகையில், மருத்துவமனையுடன் கூடிய மருந்தகங்களில், மகப்பேறு டாக்டர்கள் அறிவுரைப்படியே கருக்கலைப்பு மாத்திரைகள் விற்க வேண்டும்.மாறாக, தனியாக செயல்படும் மருந்தகங்களில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்கும் போது, உரிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.அதன்படி, மருந்தகங்களில், மகப்பேறு டாக்டர் பரிந்துரைச்சீட்டு இருந்தால் மட்டுமே கருக்கலைப்பு மாத்திரை வழங்க வேண்டும்.அப்போது, வாடிக்கையாளர் மற்றும் மகப்பேறு டாக்டரின் பெயர், முகவரி, மொபைல்போன் மற்றும் பதிவு எண் உள்ளிட்ட விபரங்களை பெற வேண்டும்.குறிப்பாக, சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில், ரத்தம் மாற்றம் செய்வதற்கான வசதி இருப்பதையும் உறுதிபடுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கோவை மற்றும் திருப்பூர் மண்டல மருத்துக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநர்கள் குருபாரதி மற்றும் மாரிமுத்து கூறியதாவது: எந்தவொரு மருந்தகத்திலும், மகப்பேறு டாக்டர் பரிந்துரைச் சீட்டு பெறாமல் கருத்தடை மாத்திரை விற்கக்கூடாது. விதிமீறி மாத்திரை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சஸ்பெண்ட், உரிமம் ரத்து, வழக்கு என, நடவடிக்கைகள் எடுக்கப்படும்.தமிழகத்தில், கடந்த ஜன., 1ம் தேதியில் இருந்து, நவ., 30 வரை, விதிமீறி கருக்கலைப்பு மாத்திரை விற்றதன்பேரில், 27 கடைகளின் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.இதேபோல, 7 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டும், 13 கடைகள் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கருக்கலைப்பு செய்யப்படுகிறது. இச்சேவையை ஏற்றுக்கொள்ளும் பெண்களின் விபரம், ரகசியம் பாதுகாக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை