கோவை புறநகர் பகுதிகளில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
மேட்டுப்பாளையம், ; மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நேற்று நடந்தது. மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 70 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. ஹிந்து முன்னணியினர், காரமடை சாலையில் உள்ள சி.டி.சி., டிப்போ முன்பு விநாயகர் சிலைகளை வரிசையாக நிறுத்தினர். அங்கிருந்து ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம் கோ -ஆப்ரேட்டிவ் காலனியை அடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. பின்பு விநாயகர் சிலைகளின் ஊர்வலம் துவங்கியது. முன்னதாக, செண்டை மேளம் சிங்காரி நடனம் நிகழ்ச்சி நடந்தது. அதற்கு முன்பாக அலங்கார வண்டியில் அசுரனை அம்மன் சுவாமி வதம் செய்யும் காட்சி இடம் பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து ஊட்டி சாலை வழியாக, சுப்ரமணியர் கோவில் அருகே ஊர்வலம் சென்று நிறைவடைந்தது. அங்கு ஒவ்வொரு சிலைகளாக இளைஞர்கள், வாகனத்தில் இருந்து எடுத்துச் சென்று, பவானி ஆற்றில் கரைத்தனர். நிகழ்ச்சிக்கு, கோவை ஹிந்து முன்னணி கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். பாதுகாப்பு பணியில், ஐ.ஜி., செந்தில்குமார்,டி.ஐ.ஜி., சசிமோகன், எஸ்.பி., கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். காரமடை, அன்னுாரில்... காரமடை அடுத்த ஆசிரியர் காலனி மூகாம்பிகை நகரை சேர்ந்து பொதுமக்கள், விநாயகர் சிலையை எடுத்து வந்து வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆற்றில் கரைத்தனர். அன்னூர் வட்டார இந்து முன்னணி சார்பில், 42 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று மாலை அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் முன் விசர்ஜன ஊர்வலம் துவங்கியது. இந்து முன்னணி மாவட்ட பொறுப்பா ளர் ராஜ் மோகன், ஒன்றிய தலைவர் செந்தில்குமார், பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ ராஜசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அன்னூர், அவிநாசியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சிறுமுகை அருகே பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன. சூலுாரில் விசர்ஜனம் சூலூர் மற்றும் கருமத்தம்பட்டி மற்றும் சுல்தான்பேட்டை பகுதியில் இந்து முன்னணி, தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத், வீர இந்து சேவா மற்றும் பொதுமக்கள் சார்பில், 190 இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பின்னர், அனைத்து சிலைகளும், சூலூர் மற்றும் கருமத்தம்பட்டிக்கு வந்தன. இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் இரு இடங்களில் விசர்ஜன விழா பொதுக்கூட்டம் நடந்தது. தொடர்ந்து, முக்கிய ரோடுகளில் ஊர்வலமாக சென்று, சூலூர் நொய்யல் ஆற்றிலும், சாமளாபுரம் குளத்திலும் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய் யப்பட்டன.