அமெரிக்க வரியால் பாதிப்பு; மத்திய அரசுக்கு சியா கடிதம்
கோவை: அமெரிக்காவின் வரி உயர்வால் பாதிக்கப்பட்ட எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு, அவசரகால உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என, 'சியா' எனப்படும் சின்னவேடம்பட்டி தொழில்துறை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சியா தலைவர் தேவ குமார், மத்திய குறு சிறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு அனுப்பியுள்ள கடிதம்: கோவை சுற்றுப்பகுதியில் ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துணி, ஆடை, உலோகம், கைத்தொழில், ஆபரணங்கள், வேளாண் உபகரணங்கள், பேக்கிங் மற்றும் மின் மோட்டார் உள்ளிட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்து, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன. அமெரிக்காவின் சமீபத்திய இறக்குமதி வரி உயர்வால், நமது ஏற்றுமதி விலை போட்டித்திறன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வேலையிழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு அவசரமாக தலையிட வேண்டும். பாதிப்புக்குள்ளான எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு, வட்டியில்லா அவசர கடனுதவி வழங்க வேண்டும். நேரடி ஏற்றுமதி மற்றும் அதற்கு வினியோகிக்கும் நிறுவனங்களுக்கு, தற்போதைய கடன்களின் தவணை மற்றும் வட்டிக்கு, ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்களில், கூடுதல் சலுகைகள் வழங்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம், மத்திய கிழக்கு, ஜப்பான் போன்ற நாடுகளுடன், வர்த்தக உடன்படிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். கோவை எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு, புதிய சந்தைகளுக்கான ஏற்றுமதி, மார்க்கெட்டிங் செலவுக்கு அரசின் நிதிப்பங்கீடு வழங்க வேண்டும். ஏற்றுமதியால் பாதிக்கப்பட்ட பொருட்களை, உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்ய, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், கொள்முதல் திட்டங்களை அறிவிக்க வேண்டும். கோவை, திருப்பூர் பகுதியில் இதற்காக ஓர் உதவி மையம் அமைத்து, பாதிக்கப்பட்ட எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு, மாற்றுத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.