கோ-கோ போட்டியில் கே.ஜி., ஓஹோ : பாரதியார் பல்கலை அணியை வீழ்த்தியது
கோவை: கல்லுாரிகளுக்கு இடையேயான கோ-கோ போட்டியில் கே.ஜி., கல்லுாரி அணி, 15-3 என்ற புள்ளி கணக்கில் பாரதியார் பல்கலை அணியை வென்றது.பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே(மண்டலம்-ஏ) மாணவர்களுக்கான கோ-கோ போட்டிகள் பி.பி.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. இதில், 10 அணிகள் பங்கேற்றன. போட்டிகளை, பி.பி.ஜி., குழும நிறுவனங்களின் தலைவர் தங்கவேலு, கல்லுாரி முதல்வர் முத்துமணி துவக்கிவைத்தனர்.பல்வேறு சுற்றுக்களை அடுத்து நடந்த அரையிறுதிபோட்டியில், கே.ஜி., கல்லுாரி, 18-2 என்ற புள்ளிக் கணக்கில் சி.எம்.எஸ்., கல்லுாரி அணியையும், இரண்டாம் அரையிறுதியில் பாரதியார் பல்கலை அணி, 8-5 என்ற புள்ளிக் கணக்கில் டாக்டர் என்.ஜி.பி., கல்லுாரி அணியையும் வென்றன.இறுதிப்போட்டியில், கே.ஜி., கல்லுாரி அணி, 15-3 என்ற புள்ளி கணக்கில் பாரதியார் பல்கலை அணியை வென்று முதல் பரிசை தட்டியது. 'டாஸ்' அடிப்படையில் மூன்றாம் பரிசை சி.எம்.எஸ்., கல்லுாரி அணியும், நான்காம் பரிசை என்.ஜி.பி., கல்லுாரி அணியும் வென்றது.வெற்றி பெற்றவர்களுக்கு பாரதியார் பல்கலை உடற்கல்வி இயக்குனர் ராஜேஸ்வரன் பரிசுகள் வழங்கினார். பி.பி.ஜி., கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.