உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எதிர்ப்பை மீறி குழாய்கள் பதிப்பு விவசாயிகள் மறியலால் பதற்றம்

எதிர்ப்பை மீறி குழாய்கள் பதிப்பு விவசாயிகள் மறியலால் பதற்றம்

சூலுார்,:பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில், கோவை மாவட்டம் இருகூரில் இருந்து பெங்களுரூ மாநிலம் தேவனஹந்தி வரை, 340 கி.மீ.,க்கு குழாய் வழியே பெட்ரோல் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆறு நாட்களாக விவசாயிகள் பல போராட்டங்களை நடத்துகின்றனர்.இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பு நிர்வாகிகள், சூலுார் விமானப்படைத் தளம் அருகே நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால், திருச்சி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் முருகசாமி கூறியதாவது:முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, எட்டு வழி சாலை பணி, உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு எதிராகக் குரல் கொடுத்தார். விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிராக, மொடக்குறிச்சியில் நடந்த மாநாட்டில் முன்னாள் தி.மு.க., அமைச்சர்கள் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.தேர்தல் அறிக்கையில் கூட, இந்த திட்டத்திற்கு எதிராக வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், தற்போது, முதல்வர் ஆன பின், விவசாயிகளுக்கு எதிராக அவர் செயல்படுகிறார். சாலை ஓரமாக குழாய் பதிக்க வேண்டும், என கோரிக்கையை ஏற்க மறுத்து, போலீஸ் பாதுகாப்புடன் பணி நடக்கிறது.குழாய் பதித்தாலும் அதன் மீது இருக்கும் மண் எங்களுடையது. அதனால், மண்ணை அகற்றுவோம். எண்ணெய் கொண்டு போக அனுமதிக்க முடியாது. எங்கள் போராட்டத்தில் உறுதியாக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !