வரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை! நகராட்சி கமிஷனர் தகவல்
பொள்ளாச்சி : 'பொள்ளாச்சி நகராட்சியில் அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்தும் பொதுமக்களுக்கு ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்,' என, கமிஷனர் கணேசன் தெரிவித்தார்.பொள்ளாச்சி நகராட்சிக்கு, சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை சேவை கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட வகையில், ஆண்டுக்கு, 33.77 கோடி ரூபாய் வருவாய் வர வேண்டியுள்ளது.இந்நிலையில், கடந்த, இரண்டு ஆண்டுகளாக நகராட்சிக்கு, 28 கோடியே, 84 லட்சத்து, 42 ஆயிரம் ரூபாய் வரி நிலுவையில் உள்ளது. இந்த வரிவசூல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாதத்துக்குள் வரி செலுத்துவோருக்கு, ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:பொள்ளாச்சி நகராட்சியில் கடந்த, ஒரு மாதத்தில், 4 கோடியே, 50 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. அதில், நேற்று முன்தினம் மட்டும், 40 லட்சம் ரூபாய் வசூலானது. தொடர்ந்து பொதுமக்கள் வரி செலுத்தி வருகின்றனர்.நகராட்சிக்கு செலுத்த வேண்டிய, 2024 - 25ம் நிதியாண்டில் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்தும் பொதுமக்களுக்கு கேட்பு தொகையில், ஐந்து சதவீதம் அதிகபட்சம், 5,000 ரூபாய் வரையில் ஒவ்வொரு வரி விதிப்புக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு வரி செலுத்தலாம். வரும், 31ம் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படும்.மேலும், வரி விதிக்கப்படாத கட்டடங்கள், குறைவாக வரி விதிக்கப்பட்ட கட்டட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து நகராட்சியில் ஆவணங்களை சமர்பித்து, வரிசெலுத்த கடந்த மாதம், 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அவர்களின் கோரிக்கை ஏற்று, வரும், 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள், வரியை செலுத்த முன்வர வேண்டும்.இவ்வாறு, கூறினார்.