உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயிர்க்கடன் விகிதத்தை 30 சதவீதம் அதிகரியுங்கள்; தொழில்நுட்பக் குழு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

பயிர்க்கடன் விகிதத்தை 30 சதவீதம் அதிகரியுங்கள்; தொழில்நுட்பக் குழு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை; பயிர்க்கடன் அளவு நிர்ணயம் செய்தல் தொடர்பான, கோவை மாவட்ட தொழில்நுட்பக் குழு ஆலோசனை கூட்டம், சாய்பாபா காலனியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி தலைமை வகித்தார். வேளாண், தோட்டக்கலை, மலை தோட்டப் பயிர்கள், கால்நடை, மீன் வளர்ப்பு, பட்டு வளர்ச்சி, பால் பண்ணை (நடைமுறை மூலதன கடன்), கோழி வளர்ப்பு, கரும்பு அலுவலர்கள் ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கொண்ட தொழில்நுட்பக் குழுவினர் பங்கேற்றனர். இதில், 2025--26ம் ஆண்டுக்கு, 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தி நிர்ணயம் செய்ததை அறிவித்தனர். வாழை பாசனத்துக்கு, ஏக்கருக்கு 99 ஆயிரம் வழங்கப்படுகிறது; தொழில்நுட்பக் குழு சார்பில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 200 நிர்ணயம் செய்யப்பட்டது. தென்னை பராமரிப்புக்கு 41 ஆயிரத்து 300 என்பது, 47 ஆயிரத்து 495 என நிர்ணயிக்கப்பட்டது. பாக்கு, காய்கறி, பந்தல் காய்கறி, கறிக்கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, சிறிய பால்பண்ணை என, ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்பட்டது. 'கூலி உயர்வு, பராமரிப்பு செலவு அதிகம் என்பன உட்பட பல்வேறு காரணிகளால், குறைந்தபட்சம் 30 சதவீதம் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். பரப்பளவுக்கு ஏற்ப பயிர் கடன் வழங்க வேண்டும்' என, விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். கலெக்டர் தலைமையில் நடக்கும் தொழில்நுட்பக் குழு கூட்டத்தில் பரிசீலித்து, சென்னையில் நடக்கும் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை