| ADDED : நவ 20, 2025 05:29 AM
வால்பாறை: எஸ்டேட் பகுதியில், யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் நிலையில், கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் தவிக்கின்றனர். ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில், வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்கள் உள்ளன. தமிழக- - கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளதால், ஆண்டு தோறும் பருவ மழைக்கு பின், கேரளாவிலிருந்து யானைகள் வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட்களில் முகாமிடுகின்றன. இந்த ஆண்டில், 150க்கும் மேற்பட்ட யானைகள் எஸ்டேட்களில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் பகல் நேரத்தில் தேயிலை காட்டை ஒட்டியுள்ள துண்டு சோலைகளிலும், இரவு நேரத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியிலும் உலா வருகின்றன. குறிப்பாக, தொழிலாளர் குடியிருப்பிற்கு இரவு நேரத்தில் கூட்டமாக வரும் யானைகள், அங்குள்ள ரேஷன் கடை மற்றும் வீடுகளை இடித்து சேதப்படுத்துகின்றன. இதனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாவதோடு, சில நேரங்களில் மனிதர்களை யானைகள் தாக்குகின்றன. எஸ்டேட் தொழிலாளர்கள் கூறுகையில், 'யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் வேட்டை தடுப்புக்காவலர்களை பணியில் அமர்த்த வேண்டும். கூடுதலாக வாகனங்களை வரவழைத்து, இரவு நேரங்களில் யானைகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க, வனத்துறை அதிகாரிகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒரே நேரத்தில், பல்வேறு எஸ்டேட்களில் யானைகள், வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்துவதால், தடுக்க முடியாத நிலை உள்ளது. யானைகளை விரட்ட கொண்டுவரப்பட்ட நான்கு வாகனங்களில், இரண்டு வாகனங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. மேலும் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாலும், இரவு நேரத்தில் யானைகளால் ஏற்படும் சேதங்களை தடுக்க முடியாத நிலை உள்ளது. விரைவில் வாகனங்கள் பழுது நீக்கவும், கூடுதல் வேட்டை தடுப்பு காவலர்களை நியமிக்கவும் உயர் அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும். இவ்வாறு, தெரிவித்தனர்.