ஒற்றை யானையின் நடமாட்டம் அதிகரிப்பு
பெ.நா.பாளையம்: தடாகம் வட்டாரத்தில் இரவு நேரங்களில் ஒற்றை யானையின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கோவை வடக்கு புறநகர் பகுதியான தடாகம் வட்டாரத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக ஒற்றை யானை நடமாட்டம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாப்பநாயக்கன்பாளையம், வரப்பாளையம், பொன்னூத்து மலை அடிவாரம், மடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாழை, தென்னந்தோப்புகளில் ஒற்றைக் காட்டு யானை புகுந்து, வேளாண் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. நேற்று அதிகாலை பன்னிமடையில் வி.கே.எல்., குடியிருப்பு பகுதியில் ஒற்றை யானை புகுந்தது. பொதுமக்கள் யாரும் நடமாட்டம் இல்லாததால், உயிர் சேதம் இல்லை. தடாகம் வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் மலைப்பாதைகளை பயன்படுத்துவதையும், ஆனைகட்டி மற்றும் அதை சுற்றியுள்ள மலை கிராமங்களுக்கு செல்வதை தவிர்க்கும்படி, பொது மக்களுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.