உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிகரிக்கும் வெயிலால் கறிக்கோழி வளர்ப்பில் சிக்கல்; அரசு சலுகைகள் கிடைக்க எதிர்பார்ப்பு

அதிகரிக்கும் வெயிலால் கறிக்கோழி வளர்ப்பில் சிக்கல்; அரசு சலுகைகள் கிடைக்க எதிர்பார்ப்பு

மேட்டுப்பாளையம்; அதிகரிக்கும் வெயிலால் கறிக்கோழிகளுக்கு எடை இழப்பு ஏற்படுகிறது. இதனால் உற்பத்தி 20 சதவீதம் சரிந்துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு கறிக்கோழிகள் அனுப்பப்படுகின்றன. இந்த தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. தற்போது நிலவி வரும் வெயில் காரணமாக கோழிகளின் உற்பத்தி சதவீதம் குறைந்துள்ளது. இதனால் விலை ஏறும் அபாயம் உள்ளது.இது குறித்து தனியார் டிரேடர்ஸ் கறிக்கோழி விற்பனை உரிமையாளர் ராஜேஷ் கூறியதாவது:-குளிர்காலத்தில் கறிக்கோழி வளர்ப்பில் தினமும் 2 முதல் 3 சதவீதம் கோழிகள் இறப்பு ஏற்படும். தற்போது வெயில் காலத்தில் சுமார் 5 முதல் 10 சதவீதம் வரை இறப்பு ஏற்படுகிறது. மேலும் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. வெயில் காலம் என்பதால் கோழிகள் திட உணவுகளை அதிகமாக உட்கொள்வது இல்லை. தண்ணீரை தான் அதிகமாக உட்கொள்கிறது. 40 முதல் 45 நாட்களுக்குள் வரவேண்டிய எடை அளவானது 50 முதல் 52 நாட்கள் வரும் போது தான் வருகிறது.சுமார் அரை கிலோ எடை இழப்பு ஏற்படுகிறது. இதனால் உற்பத்தியில் தினமும் சுமார் 20 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போதைய பண்ணை கொள்முதல் விலை ஒரு கிலோவிற்கு ரூ.90 முதல் ரூ. 95 வரை உள்ளது.கடைகளில் ஒரு கிலோ ரூ.200 முதல் 220 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் கறிக்கோழிகளை வாங்குவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் கூறுகையில், அன்னூர், மேட்டுப்பாளையம், சூலூர், அவிநாசி, போன்ற பகுதிகளில் மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்ட பண்ணைகள் உள்ளன. கோழிகளுக்கு தினமும் தண்ணீர் ஸ்ப்ரே அடிக்கப்படுகிறது. உணவுகள் கொடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வெயில் காலங்களில் இது போன்ற ஏற்பாடுகளால் கூடுதல் செலவாகிறது. கறிக்கோழி வளர்ப்புக்கு அரசு சலுகைகள் வழங்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி