ரூ.950 கோடிக்கு கடன் ஒப்புதல் வழங்கி இந்தியன் வங்கி சாதனை
கோவை: தாஜ் விவாந்தா ஹோட்டலில், இந்தியன் வங்கியின் களப் பொது மேலாளர் அலுவலகம் சார்பில் எம்.எஸ்.எம்.இ., முகாம் நடந்தது. கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை ஆர்.எம்.ஓ., டாக்டர் வாசுதேவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முகாமில், ரூ.950 கோடிக்கு மேல் எம்.எஸ்.எம்.இ., கடன்களுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் பினோத் குமார் பேசுகையில், ''இந்தியன் வங்கியின் எம்.எஸ்.எம்.இ., வளர்ச்சி தற்போது 16-17 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. வங்கியின் முழு கடன் தொகுப்பில் எம்.எஸ்.எம்.இ., பங்கு 14 சதவீதம். இதை 17 சதவீதம் வரை உயர்த்துவதே எங்கள் இலக்கு. வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே கடன் பெறும் வகையில், 14 புதிய டிஜிட்டல் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன,'' என்றார். முகாமில், கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை க்கு, 10 வீல் சேர்கள் இந்தியன் வங்கியின் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி மூலம் வழங்கப்பட்டன. இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் தசுதா ராணி, கோவை மண்டல மேலாளர் வெங்கடரமணா ராவ், துணை மண்டல மேலாளர் அமீருல்லா ஜவாஹிர் ஆகியோர் பங்கேற்றனர்.