அடிப்படை வசதிகளே இல்லீங்க இந்திய மாணவர் சங்கம் முறையீடு
கோவை ;பாரதியார் பல்கலை ஆராய்ச்சி மாணவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி, கோவை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.இந்திய மாணவர் சங்க மாவட்ட குழு சார்பில் அளித்த மனு விபரம்:பாரதியார் பல்கலையில் ஏராளமான ஆராய்ச்சி மாணவர்கள் பயில்கின்றனர். கடந்த மாதம் ஆராய்ச்சி மாணவர்களுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதால், பாதிக்கப்பட்டுள்ளனர். இயற்பியல், பயோடெக்னாலஜி, பயோகெமிஸ்ட்ரி, தாவரவியல், சுற்றுச்சூழல் அறிவியல், மனித மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல், மருத்துவ இயற்பியல், வேதியியல், விலங்கியல் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு ஆய்வுக்கான ரசாயனங்கள் இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படுவதில்லை. ஆராய்ச்சி கருவிகள் பல செயல்படாத காரணத்தால், பல்வேறு துறை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆராய்ச்சி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை பல்கலை நிறுத்தியுள்ளது. இதனால், அரசு கல்லுாரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்கலையின் ஆங்கிலத்துறை பேராசிரியர் ஒருவர், தனது பி.எச்டி., சான்றிழை ஒப்படைக்காத நிலையில், பி.எச்டி., வழிகாட்டியாக நியமிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆராய்ச்சி மாணவர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை; ஆராய்ச்சி மாணவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.