உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 237 இனிப்பு கடைகளில் ஆய்வு

237 இனிப்பு கடைகளில் ஆய்வு

கோவை: மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில், 237 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு தரம் மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், இனிப்பு தயாரிப்பு, விற்பனை முறைகளுக்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்ட இனிப்பு தயாரிப்பு கடைகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தொடர் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தற்காலிகமாக அமைக்கப்படும் கடைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது: தயாரிப்பு விபரங்கள், காலாவதி விபரங்கள் இன்றி விற்பனை செய்யக்கூடாது. கையுறை, முடிக்கவசம் கட்டாயம் பயன்படுத்தவேண்டும்.தீபாவளி முன்னிட்டு கடந்த சில நாட்களில், 237 இனிப்பு தயாரிப்பு, விற்பனை இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. திருமண மண்டபம், சமுதாய கூடங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடைகளை ஆய்வு செய்த போது, சிலர் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு இல்லாமல் இருந்தது தெரிந்து எச்சரித்து; உடனடியாக பதிவு செய்து கொடுத்துள்ளோம். தொடர்ந்து ஆய்வுகள் நடந்துவருகின்றன. விதிமுறை மீறல் இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ