பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட்: நாச்சிமுத்து பாலிடெக்னிக் சாம்பியன்
கோவை; பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையே ஆண்களுக்கான மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி கடந்த, 18ம் முதல் நேற்று வரை நடந்தது. பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி மைதானத்திலும், மருத்துவக்கல்லுாரி மைதானத்திலும் நடந்த போட்டிகளில், 14 அணிகள் பங்கேற்றன.பல்வேறு சுற்றுக்களை அடுத்து நடந்த இறுதிப்போட்டியில், பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணியும், எஸ்.ஆர்.ஐ.பி.சி., அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த எஸ்.ஆர்.ஐ.பி.சி., அணி, 25 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 98 ரன்கள் எடுத்தது.அடுத்து விளையாடிய நாச்சிமுத்து பாலிடெக்னிக் அணியினர், 21.5 ஓவரில், 6 விக்கெட்டுக்கு, 99 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். அதிகபட்சமாக வீரர் மதுச்சந்திரா, 47 ரன்கள் குவித்தார். வீரர் தர்சன் ஐந்து ஓவர்களில் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணியும், அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அணியும் மோதின. பேட்டிங் செய்த பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி, 25 ஓவரில் நான்கு விக்கெட்டுக்கு, 144 ரன்கள் எடுத்தது.அடுத்து விளையாடிய, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அணி, 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 74 ரன்கள் மட்டுமே எடுத்தது.வெற்றி பெற்ற அணிகளுக்கு, பி.எஸ்.ஜி., கல்லுாரி முதல்வர் கிரிராஜ் பரிசுகள் வழங்கினார். முதலிடம் பிடித்ததன் வாயிலாக, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணி, ஐ.பி.ஏ.ஏ., மாநில அளவிலான போட்டிக்கு, தகுதிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.