| ADDED : டிச 05, 2025 08:42 AM
வால்பாறை: அஞ்சலகங்களில் விபத்து காப்பீட்டு திட்டத்தில் சேர டிரைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வால்பாறை அஞ்சலகத்தில், பெண் குழந்தைகள், முதியவர் வரை பல்வேறு சேமிப்பு திட்டங்களில் சேர்ந்து வருகின்றனர். குறிப்பாக, பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், தற்போது, விபத்து காப்பீடு திட்டம் கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தில் வால்பாறையில் உள்ள டூரீஸ்ட் வேன், கார் டிரைவர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் நடந்தது. வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பில் நடந்த முகாமிற்கு, போஸ்ட் மாஸ்டர் கீதாஞ்சலி தலைமை வகித்தார். விபத்து காப்பீடு திட்டத்தில் சேர டிரைவர்கள் ஆர்வம் காட்டினர். அஞ்சலக அதிகாரிகள் கூறுகையில், 'விபத்து காப்பீடு திட்டத்தில், 65 வயது வரை உள்ளவர்கள் சேர்ந்து பயன்பெறலாம். ஆண்டிற்கு, 799 ரூபாய் செலுத்தினால் போதும். விபத்தின் போது, 15 லட்சம் ரூபாய் வரை சிகிச்சைக்காக மத்திய அரசு வழங்கும். வால்பாறை தாலுகாவில், 500க்கும் மேற்பட்டோர் விபத்து காப்பீடு திட்டத்தில் சேர்ந்துள்ளனர்,' என்றனர்.