மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் தரம் உயர்ந்தால் போதுமா? பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்ய தயங்குவதேன்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, 16 ஆண்டுகளுக்கு முன் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பின், இதுவரை மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் அமைக்கப்படாமல் உள்ளது.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, 1934ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. கடந்த 1975ம் ஆண்டு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது. மருத்துவமனை நான்கு ஏக்கர் 19.50 சென்ட் பரப்பளவில் உள்ளது.பொள்ளாச்சி தாலுகாவை சுற்றியுள்ள நகர மற்றும் கிராம மக்கள், மலைவாழ் மக்கள், கேரள எல்லையோரத்தில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் வால்பாறை, ஆனைமலை, கோட்டூர், வேட்டைக்காரன்புதுார், கிணத்துக்கடவு பகுதி மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். தரம் உயர்ந்தது
திருப்பூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பின், பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, தி.மு.க., ஆட்சியில், கடந்த 2009ல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது.தற்போது, 460 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை செயல்படுகிறது. போதுமான கட்டட வசதிகள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன.ஆனால், இங்கு செயல்பட வேண்டிய மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் அலுவலகம் கோவையில் செயல்படுகிறது. இதனால், பொதுமக்கள், சான்றிதழ் பெற, புகார்களை தெரிவிக்க கோவைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எதிர்பார்ப்பு
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் கட்டுப்பாட்டில், பொள்ளாச்சி, வால்பாறை, கோட்டூர், வேட்டைக்காரன்புதுார், அன்னுார், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்துார் ஆகிய இடங்களில் அரசு மருத்துவமனைகள் செயல்படுகிறது.கோவை - திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது, திருப்பூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டது.கோவை மாவட்டத்தில் இருந்து, திருப்பூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பின், பொள்ளாச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இங்கு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏமாற்றம்
ஆனால், கோவையிலேயே இந்த அலுவலகம் செயல்படுகிறது. பொள்ளாச்சிக்கு இந்த அலுவலகம் மாற்றப்படாமல் உள்ளதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.வால்பாறை மக்கள், கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டுமென்றால், கோவை செல்ல வேண்டியதுள்ளது. பொள்ளாச்சியில் இந்த அலுவலகம் அமைந்தால், பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல முடியும்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இந்த அலுவலகம் இருந்தால், மக்கள் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காணலாம். அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதால், மருத்துவ ஊழியர்கள் கவனமுடன் பணியாற்ற வாய்ப்பு உள்ளது.பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதுடன், போதுமான வசதிகளை மேம்படுத்தவும் முடியும். அதனால், பொள்ளாச்சியில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர். அறிவித்தால் வரும்!
மருத்துவ பணிகள் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் பொள்ளாச்சியில் தான் அமைக்க வேண்டும். ஆனால், மாவட்ட அளவிலான அதிகாரிகள் அனைவரும் கோவையில் இருப்பதால், இந்த அலுவலகமும் கோவையில் செயல்படுகிறது. அரசு தரப்பில் முடிவு எடுத்து, அறிவிக்கும் பட்சத்தில், பொள்ளாச்சிக்கு அலுவலகம் மாற்றப்படும்,' என்றனர்.