ரயில்வே பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கடிதம் எழுதினால் போதுமா! மக்கள் பிரதிநிதிகள் களமிறங்க எதிர்பார்ப்பு
பொள்ளாச்சி : நுாற்றாண்டு கடந்த ரயில்வே ஸ்டேஷனின் மேம்பாட்டுக்காக குரல் கொடுக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகள், வெறும் கடிதங்களை மட்டும் அனுப்புகின்றனர். இதற்கு தீர்வு கிடைக்காத சூழலில், உரிமைகளை மீட்க அரசியல் கட்சியினர் இணைந்து போராடதிட்டமிட வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.பொள்ளாச்சி ரயில்வே சந்திப்பு பகுதி முதன்முதலில், 1850ம் ஆண்டில் வணிகத்துக்காக பயன்படுத்தப்பட்டது. அதன்பின், 1900க்கு பின் இது பயணியருக்கான சந்திப்பாக பயன்படுத்தப்பட்டது.கடந்த, 1915ம் ஆண்டு, பொள்ளாச்சி - போத்தனுார் மீட்டர்கேஜ் வழித்தடம் துவங்கப்பட்டது. கடந்த, 2008ல் திண்டுக்கல் - போத்தனுார் மீட்டர் கேஜ் மாற்றத்துக்காக ரயில்வே சந்திப்பு மூடப்பட்டது.பாலக்காடு - திண்டுக்கல் அகல ரயில்பாதை பணிகள் கடந்த, 2015ம் ஆண்டும், பொள்ளாச்சி - போத்தனுார் இடையே, 2017ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து, மின்மயமாக்கப்பட்டது.நுாற்றாண்டு கடந்த ரயில்வே ஸ்டேஷனில் உரிமைகளை பெற போராட வேண்டிய நிலை தான் இன்னும் நீடிக்கிறது. காத்திருப்பு
பொள்ளாச்சி - தாம்பரத்துக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்கப்படவில்லை.பொள்ளாச்சி - பெங்களூரு பகல் மற்றும் இரவு நேர ரயில், பெங்களூரு - கோவை உதய் ரயில், பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை நீட்டிக்கவே ரயில்வே நிர்வாகம் முன்மொழிந்தும் இயங்காமல் உள்ளது.மங்களூரு - ராமேஸ்வரம் (வழி: பொள்ளாச்சி), திருவனந்தபுரம் -மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் வரை நீட்டிப்பு, கோவை - ராமேஸ்வரம் (வழி: பொள்ளாச்சி), பொள்ளாச்சி - சென்னை சென்ட்ரல் இரவு நேர மற்றும் பகல் நேர ரயில் (வழி: கோவை, சேலம், காட்பாடி), பொள்ளாச்சி - மேட்டுப்பாளையம் நேரடி பயணியர் ரயில், எர்ணாகுளம் - பாலக்காடு மெமு அல்லதுமின்சார ரயிலை பொள்ளாச்சி அல்லது பழநி வரை நீட்டிப்பு, திருநெல்வேலி - தாதர் (மும்பை) இடையே இயக்கப்படும் ரயில், பொள்ளாசசி வழியாக இயக்க வேண்டும். பொள்ளாச்சி - கோவை ரயில்களின் பயண நேரத்தை, 50 நிமிடங்களாக குறைக்க வேண்டும். இதெல்லாம் தேவை
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், மீட்டர் கேஜ் காலத்தில் இருந்தது போல பிட்லைன் (ரயில் பராமரிப்பு கட்டமைப்பு) வசதிகள் ஏற்படுத்த வேண்டும். ரயில்வே ஸ்டேஷனில்ரயில்களுக்கு தண்ணீர் நிரப்ப குழாய் வசதி அமைக்க வேண்டும்.பொள்ளாச்சி - திப்பம்பட்டியில் பொருட்களை (குறிப்பாக தென்னை காயர்) எளிதாக ஏற்றுமதி செய்ய 'இன்லேன்ட் கன்டெய்னர்' பணிமனை அமைக்க வேண்டும். பொள்ளாச்சி - கிணத்துக்கடவு - போத்தனுார் வழித்தடத்தில் இரண்டாவது ரயில்பாதை அமைக்க வேண்டும். பொள்ளாச்சி - போத்தனுார் வழித்தடத்தில் கோவில்பாளையம், செட்டிபாளையம் ரயில்வே ஸ்டேஷன்கள் அமைக்க வேண்டும்.கோவை - பொள்ளாச்சி இடையே, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ரயில்கள் இயக்க வேண்டும். ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்தி அனைத்து ரயில்களையும் நிறுத்தி இயக்க வேண்டும்.கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷன்களில் முன்பதிவு வசதி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, ரயில்வே கோரிக்கைகள் பட்டியல் நீண்டு கொண்டே இருந்தாலும், அவற்றை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆனால்,முன்பதிவு மையம் மூடப்பட்டுள்ளது.
இனியும் மவுனம் வேண்டாம்!
ரயில் பயணியர் கூறுகையில், 'அனுமதி அளிக்கப்பட்ட, பெங்களூரு ரயிலை இயக்க வலியுறுத்தினாலும் நடவடிக்கை இல்லை. கோவை - மயிலாடுதுறைக்கு ரயில் இயக்க கோரிக்கை விடுத்தால், பாலக்காடுக்கு இயக்க ரயில்வே நிர்வாகம் கருத்து கேட்கிறது.ரயில்கள் இயக்காமல் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து என்ன பலன் கிடைக்க போகிறது. இரண்டு முன்பதிவு மையம் இருந்த இடத்தில், ஒரு மையமாக மாற்றப்பட்டுள்ளது.பொள்ளாச்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ரயில்வே பிரச்னைக்கு கடிதங்கள் அனுப்புவதோடு மட்டுமே, தங்களது பொறுப்பு நிறைவடைந்து விட்டதாக கருதுகின்றனர்.கடிதங்களை அனுப்புவதை மட்டுமே பணி என கருதாமல், ஆக்கப்பூர்வமாக அடுத்தடுத்து என்ன செய்யலாம்; ரயில்வே ஸ்டேஷன் ஆய்வு செய்து அடுத்த கட்ட பணிகள் குறித்து அரசியல் கட்சியினர் இணைந்து திட்டமிட்டால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.அரசியல் கட்சியினர் இணைந்து ஒரு முடிவெடுக்க வேண்டிய தருணம் நெருங்கியுள்ளது. இனியும் மவுனம் காத்தால் உரிமைகள் இழந்து வெறும் ஸ்டேஷன் மட்டுமே இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.