பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தை ஒட்டிய ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; டாக்டர், செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை நோயாளிகள் நலச்சங்கத்தினர் முன் வைத்தனர்.பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை நோயாளிகள் நலசங்க கூட்டம், சப் - கலெக்டர் அலுவலகத்தில்நடந்தது. சப் - கலெக்டர் கேத்தரின் சரண்யா தலைமை வகித்தார். மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் ராஜா ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக, இருப்பிட மருத்துவ அலுவலர் சரவணபிரகாஷ் வரவேற்றார்.மருத்துவமனை வளாகத்தில், தலைக்காய சிகிச்சை பிரிவுக்கு, 15 தீவிர சிகிச்சை படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், உறவினர்கள் தங்கும் வகையில் 1.9 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.அதேபோன்று, ஒரு கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த ஆய்வக கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் நலன் கருதி, விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளது என, தெரிவிக்கப்பட்டது.கூட்டத்தில், டாக்டர்கள் கார்த்திகேயன், ராஜேஷ்வரி, மாரிமுத்து, நோயாளி நலச் சங்க உறுப்பினர்களான பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன், நடராஜ், முருகானந்தம், கணபதி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.கூட்டத்தில் நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர்கள் பேசியதாவது:அரசு மருத்துவமனைக்கு சி.எஸ்.ஆர்., நிதி பெற வேண்டும்.தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களின் கட்டணங்களை ஒரே மாதியாக நிர்ணயம் செய்ய வேண்டும்.மருத்துவமனை எதிரே வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்து உள்ளதால், போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும்.நோயாளி நல சங்க கூட்டத்தை ஆண்டுக்கு ஒரு முறை நடத்துவதை தவிர்த்து, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டும்.மருத்துவமனைக்கு நோயாளிகள் எளிதில் வந்து செல்லும் வகையில், மருத்துவமனை எதிரே பஸ் ஸ்டாப் அமைக்க வேண்டும்.மருத்துவமனையில் டாக்டர், மருந்தாளுனர், செவிலியர் பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும்.'சிடி' ஸ்கேன், எக்ஸ்ரே பயன்பாட்டை 24 மணி நேரமும் செயல்படுத்த வேண்டும். ரத்த வங்கிக்கு தனியாக ஆம்புலன்ஸ் வசதி தேவை.மருத்துவமனை வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள ஆக்கிரமிப்பு கடைகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்.குடியிருப்பை ஒட்டி உள்ள பிணவறையை இடமாற்றம் செய்ய வேண்டும். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.இவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கடந்தாண்டு என்ன நடந்தது?
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, தற்போது, 6.490 ஏக்கர் பரப்பில், 462 படுக்கை வசதிகளுடன் அமைந்துள்ளது. மாநிலத்தில், முதன் முறையாக குழந்தைகள் நலப்பிரிவுக்கான தேசிய தரச்சான்றும் பெற்றுள்ளது.கடந்த, 2023ல், ஏப்., முதல் டிச., மாதம் வரை, 4,07,579 பேர் வெளிநோயாளிகளாகவும், 91,232 பேர், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர். இக்காலகட்டத்தில், 2,169 பிரசவங்கள்; 3,742 அறுவை சிகிச்சைகள்; 5,522 பேருக்கு 'சிடி' ஸ்கேன்; 25,042 பேருக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே, 2,504 பேருக்கு 'டயாலிசிஸ்' செய்யப்பட்டுள்ளது.மேலும், 25 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு, 2,159 யூனிட் ரத்தம் சேகரம் செய்யப்பட்டுள்ளது. காப்பீடு திட்டத்தில், 320 பேருக்கு பொது அறுவை சிகிச்சை, 147 பேருக்கு, எலும்பு அறுவை சிகிச்சை, 121 பெண்களுக்கு சிறப்பு அறுவை சிகிச்சை, 215 பேருக்கு காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதுடன், 175 பேருக்கு காது கேட்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது, என, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.