கட்டுப்பாட்டில் உள்ளதா சட்டம் - ஒழுங்கு! மக்கள் என்ன சொல்கிறார்கள்?
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளதாக கருதுகிறீர்களா? இல்லை என்றால் அரசு செய்ய வேண்டியது என்ன?கடுமையான தண்டனை தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். தண்டனைகளை பார்த்து தவறு செய்பவர்கள் அச்சப்பட வேண்டும். போலீசார், அதிகாரிகள் மக்களுக்கானவர்களாக இருக்க வேண்டும். குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு அரசியல்வாதிகள் உதவி செய்வதை நிறுத்த வேண்டும். பதவி, பணம் ஆகியவற்றை விட்டு விட்டு அதிகாரிகள் மக்களுக்காக சேவையாற்ற வேண்டும். - ஜான் மெக்கான்ட்ரோ, காந்திபுரம். யாராலும் மாற்ற முடியாதுஎந்த ஆட்சி வந்தாலும் இதே நிலை தான்... பெரிய அளவில் எந்த பிரச்னையும் இல்லை. தனிப்பட்ட காரணங்கள், முன்விரோதம் காரணமாக பல இடங்களில் வெட்டு, குத்து நடக்கிறது. இதற்கு போலீஸ், அரசு பொறுப்பேற்க முடியாது. ஆனால், இது போன்ற கொலைகள், குற்றங்கள் யாரு ஆட்சிக்கு வந்தாலும் நடந்து கொண்டு தான் இருக்கும். யார் வந்தாலும் இதை மாற்ற முடியாது. - மகாலிங்கம், கோத்தகிரி. சட்டம் தான் முக்கியம் சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதத்தை அதிகரிப்பது போல், குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கொடுக்கப்படும் தண்டனைகளையும் அதிகரித்து, சட்டம் கொண்டு வரவேண்டும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சட்டம் கொண்டு வராததால் தான் சட்டம் - ஒழுங்கு கெட்டு போகிறது. - விஜய், காந்திபுரம். பாலியல் வன்கொடுமை அதிகரிப்புபள்ளியில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களே மாணவர்களிடம் தவறாக நடந்து கொள்கின்றனர். பள்ளியில், கல்லுாரியில், பொது இடங்களில் என எங்கு பார்த்தாலும் கொலை, பாலியல் சீண்டல். இவர்களுக்கு எப்படி தைரியம் வருகிறது. யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் தான், இதற்கு முதல் காரணம். ஆட்சியாளர்கள் சரியில்லாதது தான் இதற்கு காரணம். - பானு, கோவை. பெண்கள் வெளியே நடமாட அச்சம்கல்லுாரி, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கூட போதைப்பொருட்கள் எளிமையாக கிடைக்கிறது என்றால், சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு நன்றாக இருக்கிறது என்பதை, யோசித்து பார்க்க வேண்டும். பெண்கள் வெளியில் சென்று வரவே, அச்சப்படும் சூழலில் இருக்கிறோம். குற்றவாளிகள் எல்லாம் அரசியல் கட்சியினர், 'சப்போர்ட்டில்' ஜாலியாக இருக்கின்றனர். கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியாத நிலையில் தான், போலீசார் உள்ளனர். - ரேணுகா தேவி, கோவை. சட்டம் ஒழுங்கே கிடையாதுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. போலீசாரை அவர்களின் பணிகளை செய்ய விடுவதில்லை. அவர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதும் இல்லை, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் விடுவதில்லை. தினசரி செய்திகளில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் தான் நாம் பார்க்கிறோம். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது. அரசு தான் இந்த நிலைக்கு காரணம்.- கல்பனா, வடவள்ளி. சுய ஒழுக்கம் வேண்டும்தனிப்பட்ட விரோதம், பொறாமை உள்ளிட்ட காரணங்களுக்காக கொலைகள் நடக்கின்றன. ஒவ்வொருவரும் சுய ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். தற்போது அதிகரித்துள்ள போதைப்பொருள் கலாசாரமும், குற்ற சம்பவங்களுக்கு காரணமாக உள்ளது.- கார்த்திகேயன், உக்கடம். போதை ஒழிக்கணும்! பெரும்பாலான பிரச்னைகளுக்கு போதைப்பொருட்கள் தான் காரணம். மதியம், 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அனைத்து கடைகளும், 24 மணி நேரமும் செயல்படுகின்றன. இதுபோக, கஞ்சா பழக்கம் தாராளம். இதனால் தான் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டு போயுள்ளது. போதைப்பொருட்களை ஒழித்தால் தான் சரி. - சண்முக சுந்தரம், ஒண்டிப்புதுார்.