சின்னியம்பாளையத்தில் சிக்னல் வசதி வேண்டும் இல்லாததால் சிறுவன் பலியான பரிதாபம்
சூலூர்: சின்னியம்பாளையத்தில் சிக்னல் வசதியோ அல்லது 'யு டேர்ன் வசதியோ ஏற்படுத்தி தரவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபட மக்கள் திட்டமிட்டுள்ளனர். கோவை அவிநாசி ரோட்டில், சின்னியம்பாளையம் ஊராட்சி உள்ளது. மாநகராட்சியையொட்டி, வளர்ச்சி பெற்று வரும் கிராமம் என்பதால், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள அவிநாசி ரோட்டில், அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் சிக்னல் உள்ளது. ஓராண்டுக்கு முன் சிக்னல் முடக்கப்பட்டு, யு டேர்ன் அமைக்கப்பட்டது. குறுகலான இடங்களில் யு டேர்ன் அமைக்கப்பட்டதால், போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அதிகரித்தன. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், திடீரென 'யு டேர்ன்' அடைக்கப்பட்டதால், மக்கள் ரோட்டை கடக்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். அரசு துறை அதிகாரிகள், போக்குவரத்து போலீசாரிடம் முறையிட்டும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் ஊரில் சிக்னலும் இல்லை; யு டேர்னும் இல்லை. அதனால், ரோட்டை கடக்க ஒரு கி.மீ., சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. இரு நாட்களுக்கு முன் பஸ் ஸ்டாண்டில் ரோட்டை கடக்க முயன்ற ஒரு சிறுவன், லாரி மோதி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. சிக்னல் அல்லது யு டேர்ன் வசதி உடனடியாக ஏற்படுத்தி தர வேண்டும். இல்லையென்றால் மறியல் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.