குழந்தைகளின் ஆரோக்கியம் அறிதல் அவசியம்! பெற்றோர்களுக்கு அறிவுரை
பொள்ளாச்சி; அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் எடை, உயரம் குறித்து பெற்றோர்கள் நேரில் சென்று பார்வையிட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், 400க்கும் மேற்பட்ட அங்கன்வாடிகள் செயல்படுகின்றன. இங்கு, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, முன்பருவ கல்வி கற்பிக்கப்படுகிறது. அதேநேரம், மாதந்தோறும், வயதிற்கு ஏற்ற உயரம், வயதிற்கு ஏற்ற எடை, உயரத்துக்கு ஏற்ற எடை கண்டறியப்படுகிறது. அதில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால், வழக்கம் போல அளிக்கப்படும் சத்துமாவுடன் இணை உணவும் கூடுதலாக வழங்கப்படுகிறது. ஆனால், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் எடை, உயரம் குறித்து பெற்றோர்கள் நேரில் சென்று பார்வையிட ஆர்வம் காட்டுவதில்லை என, புகார் எழுந்துள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் எடை, உயரம் குறித்த விபரத்தை, உறுதி செய்து கொள்வதுடன் குழந்தைகளின் செயல்பாடுகளையும் அறிந்து கொள்ள வேண்டும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கூறியதாவது: பிறந்தது முதல் 5 வயது வரையான குழந்தைகளுக்கு உடல் எடை, உயரம் போன்றவை கணக்கிடப்படுகிறது. இதன் வாயிலாக அவர்கள் ஊட்டச்சத்தின் நிலை கண்டறியப்படும். வயதிற்கு ஏற்ற எடை குறைதல் அல்லது கூடுதலாக இருத்தல், வளர்ச்சி குறைந்து இருத்தல் போன்றவை கண்டறிந்து, குழந்தைகளின் பெற்றோருக்கு அறிவுரைகள் வழங்கப்படும். ஆனால், சில பகுதிகளில் பெற்றோர்கள், போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர்.குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வழங்கிடவும், குழந்தைகளுக்கு தேவையான உணவு கட்டுப்பாட்டு முறைகள் குறித்து பெற்றோருக்கு கற்றுத்தரப்படும். குழந்தைகளை தொடர் கண்காணிப்பில் பராமரித்து அவர்களின் உடல்நிலை சீராகும் வரை ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படும். இவ்வாறு, கூறினர்.