உள்புகார் கமிட்டி அமைக்காத நிறுவனம் மீது உரிமம் ரத்து நடவடிக்கை அவசியம்: பயிற்சி முகாமில் முன்னாள் நீதிபதி பேச்சு
கோவை; ''பணிபுரியும் நிறுவனங்களில் உள்புகார் கமிட்டி கட்டாயம் அமைக்கப்பட வேண்டும்,'' என, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜூ பேசினார்.பாரதியார் பல்கலை மகளிர் படிப்புத் துறை, சங்கமித்திரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில், பணியிடங்களில் 'பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல் தடை நிவர்த்தி சட்டம்-2013' குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம், ரயில்வே ஸ்டேஷன் அருகே திவ்யோதயா அரங்கில் நடந்தது.தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இணை இயக்குனர் வினோத்குமார் துவக்கிவைத்தார்.இதில், ஓய்வுபெற்ற நீதிபதி ராஜூ பேசியதாவது:பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது வேதனைக்குரியது. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தடை மற்றும் நிவர்த்தி தடை சட்டத்தை செயல் படுத்த, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பத்துக்கும் அதிகமான பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில், உள்புகார் கமிட்டி கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். இரு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி, பாலியல் புகார்கள் ஏதேனும் வந்தால் நடவடிக்கை எடுக்கவும், மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்துள்ளது.உள்புகார் கமிட்டி அமைக்காத நிறுவனங்களை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் உரிய அலுவலர்களை அரசு நியமிப்பதோடு, நடைமுறைப்படுத்தாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும், உரிமங்களை ரத்து செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தும் பட் சத்தில் பெண்கள் பாதுகாப்பு, 100 சதவீதம் உறுதிப்படுத்த முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.அறக்கட்டளையின் அறங்காவலர் சிந்து, நிர்வாக செயல் அலுவலர் விஜயகுமார், வக்கீல்கள் சிவகுமார், கோகிலா ஆகியோர் கருத்துகள் தெரிவித்தனர்.