உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராஜராஜன் போன்ற மாமனிதனை காண்பது அரிது கோவை விழாவில் தமிழருவி மணியன் பெருமிதம்

ராஜராஜன் போன்ற மாமனிதனை காண்பது அரிது கோவை விழாவில் தமிழருவி மணியன் பெருமிதம்

கோவை: கோவை அரன்பணி அறக்கட்டளை சார்பில், திருமுறைகண்ட சோழன் மாமன்னன் ராஜராஜன் விழா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி கலையரங்கில் நேற்று நடந்தது. திருவிளக்கு வழிபாடுக்கு பின், திருக்கயிலை பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை வகித்து பேசினார். தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றத் தலைவர் ஒளியரசு ஆசியுரை வழங்கினார். காந்திய சிந்தனையாளர் தமிழருவி மணியன் பேசியதாவது: நேற்று இறந்தவர்களுக்கும், இன்று இருப்பவர்களுக்கும், நாளை பிறப்பவர்களுக்கும் இடையே ஏற்படுகிற ஒப்பந்தம்தான் வரலாறு. தமிழ் சமூகம், ராஜராஜன் போன்று ஒரு மாமனிதனை காண்பது அரிது. வரலாறை பின்நோக்கி பார்க்க வேண்டும். இந்திய இளைஞனே, சமுதாய வீதியில் நீ நடந்து செல்லும் போது, நீ மட்டும் தனியாக நடந்து செல்வதாக எண்ணாதே. உனக்கு பின்னால் பாரம்பரியமும், பெருமையும் தொடர்ந்து கொண்டிருப்பதாக உணர் என்று, விவேகானந்தர் சொல்கிறார். அப்படிப்பட்டது நம் பாரம்பரியம். மாமன்னன் ராஜராஜன் குறித்து பேசும் போது ஒரு தமிழனாக பெருமிதம் கொள்வது சிறப்புக்குரியது. இவ்வாறு, அவர் பேசினார். தென்சேரிமடம் முத்துசிவராமசாமி ஆதினம் உட்பட பலர் பங்கேற்றனர். திருத்தணி சுவாமிநாதன், வடதளி, பழையாறு தர்மபுரீஸ்வர் திருக்கோவில் சிவாச்சாரியார் செந்தில், மெய்க்காவலர் குமார், உழவார திருப்பெண் தேவகி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு நிறுவனர் மணிகண்டன் ஆகியோருக்கு, மாமன்னன் ராசராசர் விருது வழங்கப்பட்டது. அனந்த கிருஷ்ணன் விழாவை தொகுத்து வழங்கினார். சிவனடியார்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

'ராசராசர் பெருங்கோவில் போல்

கட்டுமானம் வேறு கிடையாது'

நிகழ்ச்சியில் கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலை வேந்தர் வசந்தகுமார் பேசுகையில், ''கோயில்கள் எத்தகையதாக இருந்தாலும், பூஜை செய்வது மிக முக்கியம். யாரும் செய்ய இயலாத ஆன்மிகப் பணியை, அரன்பணி அறக்கட்டளை மேற்கொண்டு வருவது சிறப்புக்குரியது,'' என்றார். தஞ்சாவூர் தமிழ் சங்க தலைவர் முனைவர் தெய்வநாயகம் பேசுகையில், ''ராசராசர் கட்டிய பெருங்கோவில் போல், வியப்புக்குரிய இன்னொரு கட்டுமானம் இல்லை,'' என்றார். அரன்பணி அறக்கட்டளை தலைவர் தியாகராசன் பேசுகையில், ''தமிழகத்தில், கேட்பாரற்று இருந்த 254 சிவலிங்க திருமேனிகளுக்கு நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை சார்பில், 23 இடங்களில் ஆலயம் அமைத்து கொடுத்திருக்கிறோம். 55 ஆலயங்கள் திருப்பணிக்காக எடுக்கப்பட்டுள்ளன. இதில், 30 ஆலயங்களில் திருப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. தமிழன் என்ற முறையில் கொண்டாடப்படும் விழா இது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை