கொட்டியது கன மழை; ஆற்றில் வெள்ளப்பெருக்கு! ஆஞ்சநேயர் கோவில் செல்லவும், குளிக்கவும் தடை
பொள்ளாச்சி, உடுமலை, ஆனைமலை பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, பெய்த கனமழையால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.உடுமலையில், நேற்று முன்தினம் பகலில், மிதமான மழை பெய்தது. நள்ளிரவு, 1:00 மணிக்கு பின், இடி, மின்னலுடன் அதி கனமழை பெய்தது. பல ஆண்டுகளுக்கு பின் பெய்த கன மழையால், ரோடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான்பள்ளம் ஓடை, ராஜவாய்க்கால் ஓடை, திருப்பூர் ரோடு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.திருப்பூர் ரோடு பழைய பாலம் பகுதியில், கழிவுகள் தேங்கி, வெள்ள நீர் வடிய வழியின்றி, வி.ஜி., ராவ் நகர் பகுதியில் நுாற்றுக்கணக்கான வீடுகளை சூழ்ந்தது.கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், நகராட்சி தலைவர் மத்தீன் உள்ளிட்ட அதிகாரிகள், சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, வெள்ள நீர் வடிய நடவடிக்கை எடுத்தனர். இதனால், வி.ஜி.,ராவ் நகருக்கு செல்லும் ஓடை பாலம் சேதமடைந்தது.தங்கம்மாள் ஓடை கண்ணப்பன் நகர், செல்லம் நகர், இந்து நகர், பழனியாண்டவர் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில், மழை நீர் தேங்கியது.நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, பி.ஏ.பி.,செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் குடியிருப்புக்குள் நீர் தேங்கியது. இங்கு, ரோட்டின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், நாள் முழுவதும் வெள்ள நீரை வெளியேற்ற முடியாமல், நகராட்சி பணியாளர்கள் திணறினர்.தாலுகா அலுவலகம், கிளைச்சிறை, சார்நிலைக்கருவூலம் உள்ளிட்ட அரசு அலுவலகங்க வளாகங்களில் தேங்கிய, மழை நீரால், அலுவலகங்களுக்குள் செல்ல முடியாமல், பொதுமக்கள், அலுவலர்கள் பாதித்தனர்.தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, பழநி ரோடு உள்ளிட்ட பெரும்பாலான ரோடுகளிலும், குளம் போல் தேங்கியிருந்ததால், போக்குவரத்து பாதித்தது. பயிர் சேதம்
உடுமலை மேற்கு பகுதிகளில் இருந்து வரும் மழை நீர், ராஜவாய்க்கால் ஓடையில் கலந்து, உப்பாறு ஓடைக்கு செல்லும் வகையில் இயற்கை நீர் வழித்தடம் அமைந்துள்ளது. ராஜவாய்க்கால் ஓடை ஆக்கிரமிப்பு, கழிவு குவிப்பால், மழை வெள்ளம் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.இதனால், கணபதிபாளையம் பகுதியில், சோளம், கொத்தமல்லி, பனிக்கடலை, மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன. கிராமங்களிலுள்ள குளம், குட்டைகள் தடுப்பணைகள் நிரம்பி வழிந்தது. பொள்ளாச்சி
பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் செல்லும் தரை மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியது. பக்தர்கள் பாதுகாப்பு கருதி, கோவிலுக்கு செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டது.வால்பாறை பகுதியில் பெய்த மழையால், ஆழியாறு கவியருவியில் நீர்வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணியர் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.வனத்துறையினர் கூறுகையில், 'பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில், அதிகப்படியான சுற்றுலா பயணியர் அருவிக்கு வந்தனர். தற்போது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவியில் குளிக்க அனுமதிப்பதில்லை,' என்றனர். வால்பாறை
வால்பாறையில் பெய்யும் தொடர் மழையினால், இந்த ஆண்டில் மட்டும் சோலையாறு அணை ஏழு முறை நிரம்பியது. நேற்று முன்தினம் பெய்த கனமழையினால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பெய்யும் கனமழையால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 159.81 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 456 கனஅடி தண்ணீர் வரத்தாக இருந்தது. மழையளவு
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):வால்பாறை - 67, சோலையாறு - 13, பரம்பிக்குளம் - 14, ஆழியாறு - 59, மேல்நீராறு - 68, கீழ்நிராறு - 44, காடம்பாறை - 37, சர்க்கார்பதி - 5, மணக்கடவு - 5, துாணக்கடவு - 17, பெருவாரிப்பள்ளம் - 20, நவமலை - 17, பொள்ளாச்சி - 3.உடுமலை - 118, பெதப்பம்பட்டி - 87, பூலாங்கிணர் - 88, நல்லாறு - 83, வரதராஜபுரம் - 80, அமராவதி அணை - 54, திருமூர்த்தி அணை - 105, திருமூர்த்தி ஆய்வு மாளிகை - 100, மடத்துக்குளம் - 20, என்ற அளவில் மழை பெய்ததது.
மலைப்பாதையில் பாறை உருண்டது
வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், நேற்று மதியம், 12:00 மணிக்கு பாறை சரிந்து விழுந்தது. அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் செல்லாததால், அசம்பாவிதம் ஏற்படவில்லை. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பாறைகளை அப்புறப்படுத்தினர். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'மலைப்பாதையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள செடி கொடிகள், ஆபத்தான மரக்கிளைகள், சிறிய அளவிலான பாறைகளை ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளன. மலைப்பாதையில் வாகனங்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும்.குறிப்பாக, கனரக வாகனங்கள் மிகவும் கவனமாக இயக்க வேண்டும். மலைப்பாதையில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சீரமைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன,' என்றனர். - நிருபர் குழு -