உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பவானி ஆற்றில் மூழ்கிய ஐ.டி.ஐ., மாணவர்; தேடும் பணி தீவிரம்

பவானி ஆற்றில் மூழ்கிய ஐ.டி.ஐ., மாணவர்; தேடும் பணி தீவிரம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளித்த துடியலூர் ஐ.டி.ஐ., மாணவர் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சாமன்னா வாட்டர் பம்ப் ஹவுஸில் இருந்து, மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது. அதே போல் அதன் அருகில், திருப்பூர் நான்காம் குடிநீர் திட்டத்திற்கும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு அருகில், பொதுப்பணி துறை சார்பில் ரூ.24 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை நீச்சல் குளம் போல் நினைத்து ஆபத்தை உணராமல் இளைஞர்கள், பொதுமக்கள் அங்கு வந்து குளிக்கின்றனர். நீச்சல் தெரியாமல் ஆழம் அதிமான பகுதிகளுக்கு சென்றால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதே போல் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டால், நீர் வரத்து அதிகரித்து, வெள்ளத்தில் மக்கள் அடித்து செல்லும் நிலையும் ஏற்படும். மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் இப்பகுதியில் எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ அல்லது வேறு காரணங்களுக்காக ஆற்றினுள் இறங்கக்கூடாது. மீறினால் சட்டப்படி தண்டிக்கப்படுவீர்கள், என எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் எந்த பயனும் இல்லை. இதனிடையே துடியலூர் அரசு ஐ.டி.ஐ.,யில் படித்து வரும் ஐந்து மாணவர்கள் இங்கு, நேற்று காலை குளித்தனர். இதில் சரவணன், 17, என்ற மாணவர் நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்றதால், பவானி ஆற்றில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். மீதமுள்ள நான்கு மாணவர்கள் கரைக்கு வந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, காணாமல் போன சரவண னை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இரவாகிவிட்டதால் தேடும் பணி நிறுத்திவைக்கப்பட்டது. இன்று காலை முதல் தேடும் பணி தொடரும் என்று தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை