ரூ.5.94 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டம்; மறுசீரமைப்பு பணி துவக்கம்
ஆனைமலை; கம்பாலபட்டி மற்றும் 24 ஊரக குடியிருப்புகளுக்கு, 5.94 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மறு சீரமைப்பு பணிகள் பூமி பூஜையுடன் துவங்கப்பட்டன. பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சி கூட்டுக்குடிநீர் திட்டம் கடந்த, 1982ம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உள்ள நீர் சேகரிக்கும் கிணறு, நீர் வடிகட்டி தொட்டி, நீரேற்றும் கிணறு மற்றும் குழாய்கள் அமைக்கப்பட்டு, 43 ஆண்டுகள் ஆகின்றன. இவை பழமையான காரணத்தினால், உங்கள் தொகுதியில் முதல்வர், 2024 - 25 திட்டத்தில், சமத்துார், கோட்டூர் என, இரு பேரூராட்சிகள், ஆனைமலை, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த ஜல்லிபட்டி, கம்பாலபட்டி, எஸ். நல்லுார், பில்சின்னாம்பாளையம், கரியாஞ்செட்டிபாளை யம் ஊராட்சிகளில் உள்ள கம்பாலபட்டி மற்றும் 24 ஊரக குடியிருப்புகளுக்கு, 5.94 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மறு சீரமைக்க அரசு உத்தர விட்டது. அதில், புதியதாக நீர் சேகரிக்கும் கிணறு, மூன்று நீர் வடிகட்டி தொட்டி, பழைய நீரேற்று (சிமெண்ட் கல்நார் குழாய்) குழாய்களுக்கு பதிலாக, புதிய வார்ப்பு இரும்பு குழாய்கள், 8,665 மீட்டர் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பழைய பழுதான மின் இறைப்பான்களுக்கு பதிலாக நான்கு புதிய நீர் மின் இறைப்பான்கள் மாற்றப்பட உள்ளன. இதற்கான பணிகள் துவக்க விழா பூமி பூஜையுடன் கம்பாலபட்டியில் நடந்தது. கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்தார். எம்.பி. ஈஸ்வரசாமி, சப் - கலெக்டர் ராமகிருஷ்ண சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிகாரிகள், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை துவக்கி வைத்து அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: ஆனைமலை ஊராட்சி ஒன்றியம், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் தடையின்றி வழங்குவதற்கு மறு சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. 43 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்த இந்த குடிநீர் திட்டத்தை, தற்போது குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக மறு சீரமைக்கப்படுகிறது. ஆழியாறு அணையில் இருந்து தடையின்றி குடிநீர் கிடைக்க பெரிய அளவில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவக்கி வைப்பார். நான்கரை ஆண்டு காலத்தில் காலை உணவுத்திட்டம், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவித்தொகை திட்டம் என பல திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். எனவே, இந்த அரசுக்கு பொதுமக்கள் பக் கபலமாக இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.