மேலும் செய்திகள்
நொளம்பூரில் ரூ.3 கோடியில் விளையாட்டு அரங்க பணி
09-Dec-2025
கோவை: நேரு ஸ்டேடியம் எதிரே மாநகராட்சி மைதானத்தில் ரூ.1.50 கோடியில் கபடி போட்டிக்கான தரைதளம், மேற்கூரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை நேரு ஸ்டேடியத்தில் தடகளம், கால்பந்து பயிற்சிகளில் வீரர், வீராங்கனைகள் ஈடுபடுகின்றனர். ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி திடலில் இறகுப்பந்து, கைப்பந்து, கபடி, மூத்த விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும் வகையில், சிறிய கால்பந்து மைதானம் உள்ளது. இதில், கோவை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்த வீரர்களும் இந்த மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இம்மைதானம் திறந்த வெளியாக இருப்பதால் மழைக்காலங்களில் வீரர், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபடுவதிலும், விளையாட்டு போட்டிகள் நடத்துவதிலும் சிரமங்கள் ஏற்படுகின்றன. வீரர், பயிற்சியாளர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க, மாநகராட்சி மைதானத்தில் வாலிபால், கபடி, பேட்மின்டன் போட்டிகளுக்கு வீரர்கள் பயிற்சி எடுக்க ஏதுவாக, உள்விளையாட்டு அரங்கு அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ரூ.5 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. தனியார், பொது மக்கள் பங்களிப்புடன் முதற்கட்டமாக, ரூ.1.95 கோடியில் வாலிபால் போட்டிக்கு உள்விளையாட்டு அரங்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது. வாலிபால் போட்டிக்கு இரண்டு 'பிட்ச்'களுடன் மேற்கூரை அமைக்கப்படவுள்ளது. ஒரு மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கபடி போட்டிக்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கபடி தரைதளமும், மைதானத்திற்கு மேற்கூரை அமைப்பதற்கு ரூ.75 லட்சமும் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. வாலிபால் போட்டிக்கான உள்விளையாட்டு அரங்கு பணிகள் முடிந்தவுடன் கபடி போட்டிக்கான ஆடுகளம் அமைக்கும் பணிகள் துவங்கவுள்ளன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'மழை காலங்களில் மாநகராட்சி திடலை பயன்படுத்துவதில் வீரர், வீராங்கனைகளிடம் சிரமம் நிலவுகிறது. இதையடுத்து, மாநகராட்சி சார்பில் வாலிபால், கபடி, பேட்மின்டன் போட்டிகளுக்கு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கபடி போட்டிக்கு ஆடுகளம், பார்வையாளர் அரங்கு உள்ளிட்டவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் கபடி வீரர்களின் திறமை மேம்படும்' என்றனர்.
09-Dec-2025