கரிவரதராஜ பெருமாள் கோவில் ஆழ்வார்கள் பிரதிஷ்டை விழா
அன்னுார்: அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ஆழ்வார்கள் பிரதிஷ்டை விழா நேற்று நடந்தது.அன்னுாரில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேதர கரிவரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து கோவிலின் தெற்கு பகுதியில், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், பெரிய ஆழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய 12 ஆழ்வார்கள் சிலை நிறுவப்பட்டு, திருப்பணி செய்யப்பட்டது.கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை யாகசாலை பிரவேசத்துடன் துவங்கியது. இரவு தேவ பாராயணம் நடந்தது.நேற்று காலை 10:00 மணிக்கு, 12 ஆழ்வார்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக கரிவரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார்.காரமடை சுதர்சன பட்டர் தலைமையில் பட்டாச்சாரியார்கள் வேள்வி பூஜைகளை நடத்தினர். அன்னுார் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.