மேலும் செய்திகள்
வனப்பகுதியில் தங்கும் தனி நபர்கள்
16-Apr-2025
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை வனப்பகுதிகளில், கேரள வேட்டை கும்பல்கள் நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் சிறப்பு குழு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.டி.எப்., சிறப்பு இலக்கு படை மற்றும் வனத்துறையினர் அடங்கிய சிறப்பு குழு, துப்பாக்கிகளுடன் அடர் வனத்தில் தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.ஊட்டி அருகே கப்பத்தொரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன், காட்டு மாட்டினை கேரள வேட்டை கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொன்றது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.இச்சம்பவத்தை தொடர்ந்து கோவை மாவட்ட கேரள எல்லை, நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில், கேரள வேட்டை கும்பல் நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம், காரமடை வனப்பகுதிகளில் எஸ்.டி.எப்., சிறப்பு இலக்கு படை மற்றும் வனத்துறையினர் அடங்கிய சிறப்பு குழு, துப்பாக்கிகளுடன் அடர் வனத்தில் தீவிர ரோந்து மேற்கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:-மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட ஜக்கனாரி, கல்லாறு, நெல்லி மலை, சுண்டப்பட்டி பிரிவு, கண்டியூர், குஞ்சப்பனை ஆகிய அடர்ந்த வனப்பகுதிகளில் 10 முதல் 15 கி.மீ., வரை சிறப்பு குழுவினர் துப்பாக்கிகளுடன் உள்ளே சென்று வேட்டை கும்பல்கள், நடமாட்டம் உள்ளதா என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதியில் விலங்குகளின் கால்தடம், வேட்டையாடப்பட்ட தடங்கள் உள்ளதா என வனத்துறையினர் ஆய்வு மேற்கொள்கின்றனர். அதே போல் வனப்பகுதிக்கு வெளியே உள்ள சாலைகளில் சந்தேகம்படும் படியான வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. பழங்குடியின மக்களிடம் வேட்டை கும்பல்கள் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.காரமடை வனத்துறையினர் கூறுகையில், ''அத்திக்கடவு, பில்லுார், மேல்பாவி, குண்டூர், ஆலங்கண்டி, ஆலங்கட்டிபுதுார், காலன்புதுார், செங்குட்டை, குட்டை புதுார், பட்டி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வனத்துறையினர் தொடர் ரோந்து செல்கின்றனர். அடர் வனத்தில் சிறப்பு குழுவுடன், வனத்துறையினர் இணைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளதால், இப்பகுதி வனப்பகுதிகளில் எப்போதும் தொடர் சோதனைகள் இருக்கும். இதுவரை வேட்டை கும்பல்கள் எதுவும் சிக்கவில்லை,'' என்றனர்.கல்லாறு பகுதியில் போலீசார் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்தி, வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
16-Apr-2025