வீடு, கல்வி நிறுவனங்களில் கொலு வழிபாடு துவக்கம்
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலரும், நவராத்திரியை முன்னிட்டு, வீடுகளில் கொலு வைத்து, வழிபாட்டை துவக்கினர். புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்கி, ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு நவராத்திரி விழா, நேற்று துவங்கியது. அக்.,1ல் சரஸ்வதி பூஜை, அக்., 2ல் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலரும், நவராத்திரியை முன்னிட்டு, வீடுகள், கோயில்கள், பள்ளிகளில் கொலு வைத்து, தங்களது வழிபாட்டை துவங்கியுள்ளனர். குறிப்பாக, வீடுகளிலும், கோயில்களிலும் கொலு அமைக்கப்பட்டு சுவாமி சிலைகள், திருப்பதி பிரம்மோற்ஸவ சிலை, அர்த்தநாரீஸ்வரர், சங்கரநாராயணன், அழகர் சுவாமி, மீனாட்சி சுந்தரரேஸ்வரர், தலைவர்கள், தியாகிகள் சிலைகள், பறவைகள் மற்றும் விலங்கு பொம்மைகள், ஆண்டாள் பொம்மைகள் என பல்வேறு விதமான பொம்மைகள் வைக்கப்பட்டு தினமும் பூஜை செய்கின்றனர். மக்கள் கூறுகையில், 'விஜயதசமி தினத்தன்று, நைவேத்தியம் படைத்து, மலர்களைக் கொண்டு அம்பிகைக்கு பூஜை செய்து வழிபட்டால், முழுமையான அருள் கிடைக்கும்,' என்றனர்.