துப்பாக்கி சுடும் போட்டியில் குமரகுருவுக்கு ஆறு தங்கம்
கோவை; குமரகுரு கல்வி நிறுவனத்தை சேர்ந்த மாணவி மானிஷிகா தாரணி, மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆறு தங்கம் வென்று, தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். சென்னையில், 50வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி, 6 முதல் 14 வரை நடந்தது. சென்னை ரைபிள் கிளப் நடத்திய இப்போட்டியில், கோவை குமரகுரு கலை அறிவியல் கல்லுாரியில் பி.காம். பயிலும் மாணவி மானிஷிகா தாரணி பங்கேற்றார். பெண்களுக்கான, 10 மீ., 'பீப் சைட் ஏர் ரைபிள்' பிரிவில் மாணவி மானிஷிகா சீனியர், ஜூனியர், யூத் ஆகிய மூன்று பிரிவுகளிலும் (தனி நபர்) தங்கம் வென்றுள்ளார். குழுப் போட்டியிலும் மூன்று தங்க பதக்கங்கள் வென்றுள்ளார். இம்மாணவி, 600க்கு, 598 புள்ளிகள் என இந்தாண்டின் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து பெருமை சேர்த்துள்ளார். இதன் வாயிலாக, இந்திய தேசிய துப்பாக்கி சுடுதல் அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு, அவருக்கு பிரகாசமாகியுள்ளது. மாணவி மானிஷிகா கூறுகையில், ''கடந்த ஆண்டுகளில் வெண்கலம், வெள்ளி பதக்கங்கள் மட்டுமே வென்ற நிலையில், இந்த முறை தங்கம் வெல்ல வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தேன். கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொண்ட கடின உழைப்பின் பலன் இது. தேசிய போட்டிக்கு தயாராக உள்ளேன்,'' என்றார்.