உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயிகள் எதிர்ப்பால் திரும்பிச் சென்ற நில எடுப்பு அதிகாரிகள்

விவசாயிகள் எதிர்ப்பால் திரும்பிச் சென்ற நில எடுப்பு அதிகாரிகள்

அன்னுார்; விவசாயிகள் எதிர்ப்பால், அளவு கல்நடுவதற்கு வந்த நில எடுப்பு அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், குரும்பபாளையம் முதல் கர்நாடக எல்லை வரை, 96 கி.மீ., தூரத்திற்கு, 1,912 கோடி ரூபாயில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புறவழிச் சாலை அமைய உள்ள பகுதியில் உள்ள நிலங்களை வாங்கவோ, விற்கவோ முடியாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிக்கரசம்பாளையத்தில் புறவழிச்சாலைக்காக நில அளவீடு செய்து கல் நடுவதற்காக நில எடுப்பு தனி தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் ஊழியர்கள் நேற்று காலையில் வந்தனர். ஐந்து இடங்களில் கல் நட்டு அளவீடு செய்யத் துவங்கினர். தகவல் அறிந்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் அமைப்புச் செயலாளர் ஜோதி அருணாசலம், மாவட்ட செயலாளர் நடராஜன் மற்றும் விவசாயிகள் அங்கு திரண்டனர். அதிகாரிகளிடம், 'இந்தத் திட்டம் குறித்து 15 கேள்விகள் எழுப்பி அதற்கு பதில் வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர், கலெக்டர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடமும் மனு கொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டது. அதற்கு இதுவரை பதில் தரப்படவில்லை.ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலையை அகலப்படுத்தலாம். எங்கள் விவசாய நிலத்தை கையகப்படுத்த விடமாட்டோம்,' என வாக்குவாதம் செய்தனர். அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக தரும்படி கூறினர். இதையடுத்து விவசாயிகள் எங்கள் விவசாய நிலத்தை புறவழிச் சாலைக்கு தர மாட்டோம் என எழுதிக் கொடுத்தனர். இதையடுத்து நில எடுப்பு அதிகாரிகள் கல் நடும் பணியை பாதியில் நிறுத்திவிட்டு திரும்பி சென்றனர்.இதுகுறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில்,' ஓரிரு நாட்களில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து போராட்டம் அறிவிக்க உள்ளோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ