உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோத்தகிரி சாலையில் நிலச்சரிவு தடுக்க ரூ.4 கோடியில் மண் ஆணி! ஒரு மாதத்தில் பணிகள் துவங்கும்

கோத்தகிரி சாலையில் நிலச்சரிவு தடுக்க ரூ.4 கோடியில் மண் ஆணி! ஒரு மாதத்தில் பணிகள் துவங்கும்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் -- கோத்தகிரி சாலையில் நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்க, ரூ.4 கோடியில் மண் ஆணி அமைக்கும் திட்டம், இன்னும் ஒரு மாதத்திற்குள் துவங்கவுள்ளது.மேட்டுப்பாளையத்தில் இருந்து குஞ்சப்பனை வழியாக கோத்தகிரி சென்று அங்கிருந்து ஊட்டி செல்லும் சாலை உள்ளது.இயற்கை அழகை ரசித்தவாறு செல்ல பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையை விரும்புகின்றனர். பைக் ரைடர்ஸ் அதிகம் வலம் வரும் சாலை என்றால் கோத்தகிரி சாலை தான்.கடந்த 2023ம் ஆண்டு, நவம்பர் மாதம் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதனால், மேட்டுப்பாளையம் - -கோத்தகிரி சாலையில், வியூ பாயின்ட் மற்றும் குஞ்சப்பனை அருகே 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு, மண் சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 3 நாட்கள் போராடி சாலை சீரமைக்கப்பட்டு, மீண்டும் போக்குவரத்து துவங்கியது.நிலச்சரிவு, பாறைகள் உருண்டு விழுந்த இடங்களில், மீண்டும் நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க இருக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தனர்.அண்மையில் கோத்தகிரி சாலையில் வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டது. இக்குழுவின் பரிந்துரை படி தற்போது நிலச்சரிவை தடுக்க மண் ஆணி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் உட்கோட்ட மாநில நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் நிலச்சரிவு ஏற்படும் 3 இடங்கள் கண்டறியப்பட்டன. இந்த இடங்களில் மண் ஆணி அமைத்தல், கருங்கல் தடுப்பு வலை சுவர் திட்டங்களை செயல்படுத்தலாம் என தெரிவித்தனர். இதற்கு தற்போது ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் துவங்க உள்ளது.தற்போது, மழை பெய்து வருவதால், மேட்டுப்பாளையம் - - கோத்தகிரி சாலை வழியாக செல்வோர் கவனத்துடன் செல்ல வேண்டும். சாலையோரம் வாகனங்களை நிறுத்தக்கூடாது. மழை பெய்யும் போது, கூடுதல் கவனத்துடன் பொறுமையாக தான் வாகனங்களை இயக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் இச்சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மண் ஆணி அமைப்பது எப்படி?

மண் ஆணி அமைத்தல் என்பது, மலையின் செங்குத்தான சரிவில் மண் அரிப்பை தடுத்து, நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம். மண் ஆணி அமைத்து, ஜியோ கிரிட் வழியாக மண்ணின் உறுதித்தன்மையை அதிகரித்து, 'ஹைட்ரோ சீடிங்' முறையில், புல் வளர்க்கப்படுகிறது. 'ஹைட்ரோ சீடிங்' என்பது புல் விதை, உரம் உள்ளிட்டவற்றை நீரில் கலந்து உருவாக்கும் விதைக் கலவையை, உயர் அழுத்த குழாய் வழியாக, செங்குத் தான மலைப்பகுதிகளில் தெளிப்பதாகும். 'ஜியோ கிரிட்' எனப்படும், பாலிமர் பொருள்களால் செய்யப்பட்ட இரும்பு கம்பி பாய்கள் புல் விதைகள் விதைக்கப்பட்ட மேல் பகுதியில் பரப்பப்பட்டு, மண் ஆணிகளுடன் இணைக்கப்படுகின்றன. இது மண் சரிவை தடுக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ