மேலும் செய்திகள்
எஸ்டேட்டில் யானை; தொழிலாளர்கள் அச்சம்
12-Nov-2025
வால்பாறை: வால்பாறை எஸ்டேட் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ளதால், தொழிலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும், என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் யானைகளை தொடர்ந்து, தற்போது சிறுத்தை நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது. தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி அருகே உள்ள புதரில், பகல் நேரத்தில் பதுங்கும் சிறுத்தை வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளான நாய், ஆடு, மாடு, கோழிகளை கவ்வி செல்கிறது. சில நேரங்களில், வீட்டின் முன் விளையாடும் குழந்தைகளையும் சிறுத்தை கவ்வி செல்கிறது. இதனால், வால்பாறை தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர். இதனிடையே தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்லும் வழியில் பகல் நேரத்தில் சிறுத்தை நடந்து செல்வதும், அங்குள்ள பாறை மீது ஓய்வெடுப்பதும் வழக்கமாகி விட்டது. வால்பாறை அடுத்துள்ள வேவர்லி எஸ்டேட் பகுதியை ஒட்டியுள்ள பாறை மீது சிறுத்தை பகல் நேரத்தில் படுத்திருப்பதை அந்த வழியாக சென்ற தொழிலாளர்கள் கண்டு, பீதியடைந்தனர். தொழிலாளர்கள் கூறுகையில், 'கடந்த சில மாதங்களுக்கு முன், இதே பகுதியில் வனவிலங்கு தாக்கி சிறுவன் உயிரிழந்தான். எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்திலேயே நடமாடும் சிறுத்தையை வனத்துறையினர் கண்காணித்து, கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'எஸ்டேட் பகுதிக்கு சிறுத்தை வராமல் இருக்க, தொழிலாளர் குடியிருப்பு பகுதியில், செல்லப்பிராணிகள், கால்நடைகள் வளர்க்ககூடாது. அதே போல் குடியிருப்பை சுற்றியுள்ள புதரை அந்தந்த எஸ்டேட் நிர்வாகங்கள் அகற்ற வேண்டும். மாலை நேரங்களில் குழந்தைகளை வீட்டின் வெளியே விளையாடவோ, வெளியில் தனியாக செல்லவோ அனுமதிக்கூடாது,' என்றனர்.
12-Nov-2025