உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / ஆரோக்கியம் / நெகட்டிவ் எண்ணம் என்ற சூரனை முதலில் வெல்வோம்!

நெகட்டிவ் எண்ணம் என்ற சூரனை முதலில் வெல்வோம்!

கோவை: கந்த சஷ்டியின் ஆறாம் நாளில் நடந்த சூரசம்ஹாரம் போல், நம் மனதுக்குள் இருக்கும் சூரனை அழித்து, மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்கிறார் மனநல டாக்டர் எந்துமதி. மனிதர்களுக்கு நெகட்டிவ் எண்ணங்கள் ஏற்பட சிறு வயதில் ஏற்படும் கசப்பான அனுபவங்கள், பெற்றோரின் சண்டை, பாசத்திற்காக ஏங்குவது, சுற்றியிருப்பவர்கள் நடத்தும் விதம், மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது போன்றவை முக்கியமானவை. இதன் விளைவாக பெரியவர்களானதும் ஏற்படும் நிராகரிப்பு, அவமானம், தோல்விகள், ஏமாற்றம், துரோகம் போன்ற அனுபவங்களால் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்குமோ என்ற பயம் ஏற்படுகிறது. தாழ்வு மனப்பான்மை, மன அழுத்தம் போன்றவற்றாலும் இனிமேலும் நம் வாழ்க்கையில் தவறான விஷயங்கள்தான் நடக்கும் என்ற எண்ணம் உருவாகிறது. கோபம், பொறாமை, பழிவாங்கும் எண்ணங்கள் வருவது சகஜம்தான். அப்படி வரும்போது சிறிது நேரம் அமைதியாக இருந்து, என்ன நடந்தது, இதற்கு என்ன செய்யலாம், நம்மீது தவறா அல்லது அவர்கள் மீது தவறா என்று சிந்தித்துப் பின்னர் முடிவெடுத்தால், அது அனைவருக்கும் நன்மை பயக்கும் என்கிறார் டாக்டர் எந்துமதி. இதுபோன்ற நெகட்டிவ் எண்ணங்கள் வருவதைத் தடுக்க, வாழ்வியலில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். சிறிது நேரம் என்ன நடந்தது என்று சிந்திப்பது, நமக்கென ஹாபீஸ் ஏற்படுத்திக்கொண்டு அவற்றில் ஈடுபடுவது, நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுவது போன்றவற்றின் மூலம் இந்த வகையான எண்ணங்களில் இருந்து விடுபட முடியும். இவற்றைச் செய்தும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்கிறார் இவர். நல்ல தூக்கம், உடற்பயிற்சி, யோகா, வாழ்க்கை முறை மாற்றங்கள், நேர்மறையான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது போன்றவையும் முக்கியம். சிந்தனைகளைச் சோதித்துப் பார்ப்பதும் அவசியம். 'இது சரிதானா? இது சரியில்லை என்றால் என்ன செய்திருக்கலாம்? என் நண்பர் இந்த நிலையில் இருந்தால் நான் என்ன செய்திருப்பேன்?' போன்ற கேள்விகளை நமக்குள் எழுப்பிச் சிந்திப்பதும் உதவும் என்கிறார் டாக்டர் எந்துமதி.

'ஒவ்வொருவரின் குணமும் வேறு'

''ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணம் கொண்டவர்கள். அவர்களுக்கெனத் தனித்துவம் இருக்கிறது. எப்படி அனைத்து மலர்களும் தனித்துவம் கொண்டவையோ, அதேபோல்தான் மனிதர்களும். அப்படியிருக்க, நம் கருத்துக்களுடன் பிறர் கருத்துக்கள் ஒத்துப்போகும் என எதிர்பார்ப்பது தவறு.அடுத்தவர்களுடன் நம்மை ஒப்பிடுவதற்குப் பதிலாக, நம்மை நாமே ஒப்பிட்டுப் பார்த்தால் முன்னேறலாம். போன வருடம் நான் இப்படி இருந்தேன், இந்த வருடம் இவ்வளவு முன்னேறியிருக்கிறேன், அடுத்த வருடம் இதைவிட எப்படிச் சிறப்பாக முன்னேறுவது என்று சிந்தித்து ஒப்பிட்டுப் பார்ப்பது சிறந்தது. அது நமக்கு வளர்ச்சியைத் தரும். நம்மை நாமே பாராட்டிக்கொள்வதும் சிறந்தது'' என்கிறார் டாக்டர் எந்துமதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை