காட்டுப்பன்றியை வேட்டையாடுவோம்
வடவள்ளி: தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகள் - பொதுமக்கள் ஒருங்கிணைப்பு கூட்டம், கல்வீரம்பாளையத்தில் நடந்தது. தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். 'வன எல்லையில் இருந்த காட்டுப்பன்றிகள், விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. பின், மனிதர்களை தாக்கத் துவங்கியது. தற்போது, வன எல்லையில் இருந்து நகர் பகுதிகளுக்கும் காட்டுப்பன்றிகள் வருகின்றன. காட்டுப்பன்றிகளை ஒழிக்க வேண்டும். சாலைகளில் நாய், குதிரை, மாடுகள் ஆகியவை, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் சுற்றித் திரிகின்றன. அவைகளை பிடித்து, அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் கட்டுப்படுத்தாவிட்டால், விவசாயிகள் வேட்டையாடுவோம்' என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.