இனி ஹாய் சொல்லுவோம் டிஜிபின்
'அ ன்புள்ள உறவுக்கு... நலம். நலமறிய ஆவல்...'. எனத்துவங்கி, பாசத்தையும், நேசத்தையும், பிரச்னைகளையும் எழுத்துக்களில் கோர்த்துத் தைத்து பெற்றோர், நண்பர்கள், உறவுகளிடம் பேச பயன்படுத்தப்பட்டதுதான் கடிதங்கள்.உறவுகளிடையே இருந்த துாரத்தை, அந்தக்காலத்தில் குறைத்ததில் பெரும் பங்கு கடிதங்களுக்கு உண்டு. 'சார்...போஸ்ட்' என்ற தபால்காரரின் குரலுக்காக காத்திருந்தவர்கள் பலர். கடிதத்தை வாங்கி படிக்கும் வரை அந்த உற்சாகம் குறையாது.இனி விஷயத்துக்கு வருவோம்...!உள்ளூர், வெளியூர் என்ற எந்த கடிதமானாலும், அதில் முக்கிய இடம் பிடிப்பது ஆறு இலக்க பின்கோடுதான். இன்று வரை பயன்படுத்தப்பட்டு வந்த பின்கோடு முறைக்கு வந்து விட்டது முற்றுப்புள்ளி.அதற்கு பதிலாக, 'டிஜிபின்' பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஜிபின் அமைப்பு வீடு அல்லது வணிக நிறுவனத்தின் சரியான இருப்பிடத்தைக் குறிக்கிறது. டிஜி பின் எப்படி பெறுவது?
இந்திய அஞ்சல் துறை பிரத்யேக இணைய தளத்தை துவங்கியுள்ளது. இதில் பயனாளர்கள் தங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் முகவரிக்கான, டிஜிட்டல் பின்னை உருவாக்கலாம்.டிஜி பின் என்பது, 10 இலக்க எழுத்து, எண்களை கொண்ட தனிப்பட்ட குறியீடு. இது தபால், கொரியர் வினியோகத்துக்கு மட்டுமல்ல, போலீஸ், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால தேவைகளுக்கும் பயன்படும். டிஜிபின்னை, https://dac.indiapost.gov.in/mydigipin/home என்ற இணையதளத்தில் உருவாக்கலாம். இம்முகவரிக்கு சென்ற பின், இருப்பிடம் குறித்த தகவல்களை அதாவது, 'லொக்கேஷன்' அனுமதியை வழங்க வேண்டும். இதன்பின், உங்கள் இருப்பிடத்துக்கான டிஜிபின் தானாக உருவாகி விடும். இதை தேவையான இடத்தில் பயன்படுத்தலாம்.பின்கோடு, ஒரு ஒட்டுமொத்த பகுதியை குறிக்கும். ஆனால் டிஜிபின், நம் இருப்பிடத்தை துல்லியமாக குறிக்கும்.