உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்... ஆரோக்கியம் காக்க!தினமும் 8 கி.மீ., நடைபயிற்சிக்கு ஏற்பாடு

நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்... ஆரோக்கியம் காக்க!தினமும் 8 கி.மீ., நடைபயிற்சிக்கு ஏற்பாடு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், 'நடப்போம், நலம் பெறுவோம்' திட்டத்தின் கீழ், எட்டு கி.மீ. துாரத்துக்கு நடைபயிற்சி மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு, திட்டம் தயார் நிலையில் உள்ளது.தமிழகத்தில் நடைபயிற்சி பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில், 'நடப்போம், நலம் பெறுவோம்' (ெஹல்த் வாக்) திட்டம், தமிழக சுகாதாரத்துறை வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. மாவட்ட தலைநகரங்களில், எட்டு கி.மீ. துாரத்துக்கு பிரத்யேக நடைபாதை உருவாக்கப்பட்டது. இங்கு பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், 104 தொற்றா நோய்களை தவிர்க்கவும், கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்தவும், 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளுடன் அனைத்து மாவட்டங்களிலும் கூடுதலாக நடை பயிற்சி தடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக எட்டு கி.மீ. நடைபாதையை அடையாளம் கண்டு இறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பாதையிலும் நிரந்தர நுழைவு வளைவு, ஒரு கி.மீ.,க்கு மைல் கற்கள், ஓய்வெடுக்கும் பெஞ்சுகள், போதுமான விளக்குகள், குடிநீர், கழிப்பிட வசதிகள், கழிவுகளை அகற்றும் தொட்டிகள், சுகாதாரம் தொடர்பான காட்சிபலகைகள் அமைக்க வேண்டும். அத்துடன் இயற்கையை ரசித்தல், சுத்தம் செய்தல், பராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் இந்த பாதைகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். மேலும், சுகாதார நன்மைகளை அதிகரிக்க பொது சுகாதார குழுக்கள், ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு நடைபாதையிலும், மாதாந்திர ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் குறித்த பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும். இவ்வாறு, சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, பொள்ளாச்சி நகராட்சியில், 'நடப்போம், நலம் பெறுவோம்' திட்டத்துக்கான இடம் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டனர். அதில், மகாலிங்கபுரம் ஆர்ச் முதல், புளியம்பட்டி வரை எட்டு கி.மீ. துாரத்துக்கு நடைபாதை தேர்வு செய்துள்ளனர். இதற்கான ஆயத்தப்பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மகாலிங்கபுரம் ஆர்ச்சில், 'நடப்போம், நலம் பெறுவோம்' நடைபயிற்சி சிறந்த உடற்பயிற்சி என, குறிப்பிடப்பட்டுள்ளது. நடைபயிற்சி செல்வதற்கான பாதையும் அதில் வரையப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறியதாவது: 'நடப்போம் நலம் பெறுவோம்' பொள்ளாச்சி நகராட்சியில் மகாலிங்கபுரம் ஆர்ச்சில் இருந்து, புளியம்பட்டி பி.ஏ. கல்லுாரி அருகே உள்ள பேக்கரி வரையும்; அங்கு இருந்து மீண்டும், மகாலிங்கபுரம் ஆர்ச்சில் முடிக்கும் வகையில் எட்டு கி.மீ. நடைபாதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடைபாதையின் இருபுறமும், 'எனக்கு இரண்டு மருத்துவர்கள் உள்ளனர்; என் இடது கால், மற்றும் வலது கால்; துாங்குவதற்கு முன்னும், பின்னும் நடப்பது ஒரு மனிதனை ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது. நடைபயிற்சி உங்கள் பணத்தையும் ஆரோக்கியத்தையும் காக்கும், சுற்றுச்சூழலுக்கு உதவும். அதிகாலை நடைபயணம் முழு நாளுக்கு ஓர் ஆசிர்வாதம். நடைபயிற்சி மிகவும் பழமையான உடற்பயிற்சி போன்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்படுகிறது. ஆங்காங்கே ஓய்வு எடுக்க வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவுக்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தை முதல்வர் விரைவில் துவக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !