துாய்மை பணியாளர்களுக்கான வாழ்வியல் மேம்பாட்டு நிகழ்ச்சி
வால்பாறை; தேசிய துாய்மை பணியாளர் ஆணையம் மற்றும் தமிழ்நாடு துாய்மை பணியாளர் நலவாரியம் சார்பில், துாய்மை பணியாளர்களுக்கான வாழ்வியல் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. வால்பாறை நகராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு துாய்மை பணியாளர் ஆணைய துணைத்தலைவர் கனிமொழி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். தமிழ்நாடு துாய்மை பணியாளர் நலவாரிய தலைவர் ஆறுச்சாமி கலந்து கொண்டு, துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அவர், பேசுகையில், ''மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா பகுதியான வால்பாறையில் துாய்மை இந்தியா திட்டம், தமிழக அரசின் வாயிலாக சிறப்பாக செயல்படுகிறது. துாய்மை பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சம்பள உயர்வு விரைவில் அறிவிக்கப்படும். தமிழக அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும், உரிய நேரத்தில் துாய்மை பணியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். நிகழ்ச்சியில், ஊழல் எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு கவுன்சிலர் தலைவர் ராம்பிரகாஷ், தாட்கோ மாவட்ட மேலாளர் மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.