தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் விளக்கு பொறி
சூலுார்:''தென்னையில் பாதிப்பு ஏற்படுத்தும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விளக்கு பொறிகளை பயன்படுத்த வேண்டும்,'' என,தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தி உள்ளது.சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சூலுார் வட்டாரத்தில் ஒரு சில இடங்களில் தென்னைகள், ருகோஸ் சுருள் வெள்ளை ஈக்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விளைச்சல் பாதிக்கும். இந்த வெள்ளை ஈக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஏக்கருக்கு இரண்டு விளக்கு பொறிகள் வைக்க வேண்டும். இதன்மூலம் வெள்ளை ஈக்கள் கவர்ந்து அழிக்கப்படும். மஞ்சள் நிற ஒட்டு பொறிகளை, விளக்கெண்ணை அல்லது கிரீஸ் தடவப்பட்ட மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களை, ஏக்கருக்கு, 10 என்ற எண்ணிக்கையில் ஆறடி உயரத்தில் தொங்க விட்டு, வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம். பாதிப்புக்குள்ளான ஓலைகளின் மீது மிக வேகமாக தண்ணீரை அடிப்பதன் மூலமும் கட்டுப்படுத்தலாம். நன்மை செய்யும் ஒட்டுண்ணியான என் கார்சியா என்ற கூட்டுப்புழு உள்ள ஓலை துண்டுகளை, ஏக்கருக்கு, 20 வீதம் பாதிக்கப்பட்ட மரங்கள் மீது வைக்கலாம். மேலும் விபரங்களுக்கு சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி ஆலோசனைகள் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.