ரோட்டில் சிங்கவால் குரங்குகள்; சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை
வால்பாறை; வால்பாறையில் உலா வரும் சிங்கவால் குரங்குகளுக்கு, சுற்றுலா பயணியர் உணவு வழங்கக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிங்கவால்குரங்குகள் உள்ளன. மிகவும் கூச்சசுபாவமுடைய இந்த குரங்குகள் வனப்பகுதியில் கிடைக்கும் பழங்கள், கொட்டைகளை உணவாக உட்கொள்கின்றன.இந்நிலையில், வால்பாறையில் தற்போது குளு... குளு... சீசன் நிலவுவதால், சுற்றுலாபயணியர் அதிக அளவில் வாகனங்களில் வால்பாறைக்கு வரத்துவங்கியுள்ளனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறை நகரில் இருந்து ஒரு கி.மீ., துாரத்தில் உள்ள புதுத்தோட்டம் ரோட்டில் சிங்கவால்குரங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இவை ரோட்டில் வாகனங்களில் சிக்கி பலியாகாமல் தடுக்க, ஆறு இடங்களில் ஊஞ்சல் கட்டப்பட்டுள்ளன.வால்பாறைக்கு சுற்றுலாவரும் பயணியர் மலைப்பாதையில் மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும். சிங்கவால்குரங்குகள் நடமாடும் பகுதியில் அதற்கு உணவு கொடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது. மீறினால் வனஉயிரின பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.